

தேர்தல் நடத்தை விதிகளை மீறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குபதிவு செய்வதுடன், அவர் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவிடம் பாஜகசார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சார்பில், தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுமாநில பொறுப்பாளர் வி.பாலச்சந்திரன், மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவை நேற்று சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
கல்வி நிறுவனத்தில்..
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூட்டில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் மார்ச் 1-ம் தேதி பிரச்சாரம் செய்தார். கல்வி நிறுவன வளாகத்தில் பிரச்சாரம் செய்வது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயலாகும்.
அந்த பிரச்சாரத்தின்போது, ‘‘இந்தியாவுக்கு மீண்டும் ஒருசுதந்திரப் போராட்டம் தேவைப்படுகிறது. நாட்டில் பரவியுள்ள கோபம், பயம் இவற்றுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது’’ என்று பேசியுள்ளார்.
சட்ட மீறல்
நாடு சுதந்திரம் பெற்றுள்ள நிலையில் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் தேவைஎன்று கூறியிருப்பது சட்ட மீறலாகும். எனவே, தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு புகாரில் தெரிவித்துள்ளனர்.