

நாமக்கல் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
நாமக்கல் அருகே எர்ணாபுரம் கணக்கத் தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி சின்னத்தம்பி (65). இவரது மனைவி மல்லிகா (60). இவர்களது மகன் ஜெயக்குமார் அமெரிக் காவில் பணியாற்றுகிறார்.
சின்னதம்பி தனது வீட்டின் அருகே உள்ள பழைய வீட்டை இடித்து அகற்ற முடிவு செய்தார். இதற்காக ஓடுகளை அகற்றிய சின்னதம்பி நேற்று காலை சுவர் இடிக்கும் பணியில் ஈடுபட்டார். இதை அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மனைவி பூங்கொடி (55) மற்றும் அவரது இரண்டு வயதுடைய பேத்தி ஆகியோர் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் சின்னதம்பி மற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பூங்கொடி, அவரது பேத்தி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
இதில் படுகாயமடைந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக நல்லி பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.