

புதுச்சேரி அரசியல்வாதிகள் பலருக்கும் ஆன்மிக தலமாக சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோயில் இருந்து வருகிறது. குறிப்பாக, புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, தனது முக்கிய அரசியல் முடிவுகளின்போது சேலம் அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு வந்து தியானம் செய்து தனது ஆன்மிக குருவான அப்பா சாமியின் ஆசி பெற்று செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
“இவரைப்போல புதுச்சேரி அரசியல்வாதிகள் பலரும் இக்கோயிலுக்கு வந்து வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்” என கோயில் நிர்வாகி முத்துமணி ராஜா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, ‘‘தவத்திரு அப்பா பைத்தியம் சாமி,கருவூர்கோட்டை ஜமீன் பரம்பரையில் 1859-ம் ஆண்டு பிறந்தார். கிருஷ்ணராஜ் என்ற இயற்பெயரில் அழைக்கப்பட்ட அவர் தனது 16-ம் வயதில் வீட்டைவிட்டு வெளியேறி பழநிமலை சென்று அங்கு அழுக்கு சாமியை குருவாகக் கொண்டுஞானம் பெற்றார்.
பின்னர் புதுச்சேரியில் நீண்டகாலமாக வசித்தபோது, புதுச்சேரிமுன்னாள் முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அம்மாநில அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சாமியிடம் ஆசி பெற்றனர்.
‘புதுச்சேரி முதல்வராக நீ வருவாய்’ என ரங்கசாமியிடம் அப்பா பைத்தியம் சாமி கூறினார். அவர் கூறியபடி, ரங்கசாமி முதல்வரானார். அன்றுமுதல் ரங்கசாமி மட்டுமல்லாது, புதுச்சேரி அரசியல்வாதிகள் பலரும் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.
ஏழை மக்களின் பசியைப் போக்க சாமி அன்னதானத்தை தொடங்கினார். எல்லோரையும் சமமாக பாவிப்பது, யார் ஆத்மார்த்தமாக எதை கேட்கிறார்களோ அதை தருவது சாமியின் சிறப்பு. தனது 141-வது வயதில் கடந்த 2000-ம் ஆண்டு சேலத்தில் சாமி ஜீவசமாதி அடைந்தார். அங்கு கோயில் கட்டப்பட்டு தன்னை நாடி வரும் பலருக்கும் ஆசி வழங்கிவருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, சட்டப்பேரவை தேர்தல் பரபரப்புக்கு இடையில் சில தினங்களுக்கு முன்னர் ரங்கசாமி, அப்பா பைத்தியம் சாமி கோயிலில் வழிபட்டு சென் றுள்ளார்.