Last Updated : 05 Mar, 2021 03:15 AM

 

Published : 05 Mar 2021 03:15 AM
Last Updated : 05 Mar 2021 03:15 AM

கெளசிகா நதி சார்ந்த அனைத்து கிராமங்களுக்கும் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரிவுபடுத்தப்படுமா?

கோப்புப் படம்

கோவை

கெளசிகா நதியைச் சார்ந்துள்ள அனைத்து கிராமங்களுக்கும் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி யுள்ளனர்.

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் குருடிமலை அடிவாரத்தில் தொடங்கி, இடிகரை, கோவில் பாளையம், வாகராயம்பாளையம், திருப்பூர் மாவட்டம் தெக்கலூர். வஞ்சிபாளையம் வழியாகச் சென்று கணியாம்பூண்டி வரை சுமார் 50 கிலோமீட்டர் தொலைவுக்குப் பயணித்து நொய்யலாற்றில் கலக்கிறது கெளசிகா நதி. இது காட் டாறு என்பதால், மழைக்காலங்க ளில் சேகரமாகும் தண்ணீர் மற்றும்வழியில் உள்ள நீர்வழித் தடங்களும் கௌசிகா நதிக்கான முக்கிய நீராதாரமாகும். மழைக் காலங்களில் நொய்யலாற்றை நோக்கிச் செல்லும் நீரைத் தடுத்து நிறுத்தி, மக்கள் பயன்பெறும் நோக்கில் 35 தடுப்பணைகள் வரை கட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவை, திருப்பூர், ஈரோடு மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி பாசனம், நிலத்தடி நீர்செறிவு மற்றும் குடிநீர் வழங்கும் திட்டம் ரூ.1,652 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் காளிங்க ராயன் அணைக்கட்டுக்கு கீழே பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து, ஈரோடு, திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 1,044குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கிடையில், கெளசிகா நதியை நிலத்தடி நீராதாரமாகவும், மேய்ச்சலுக்கான பகுதியாகவும், விவசாயத்துக்காகவும் நம்பியுள்ள வர்கள் பயனடையும் வகையில், நதியின் வழித்தடத்தில் விடுபட்டுள்ள 15 தடுப்பணைகளையும் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் கீழ் சேர்த்து, கெளசிகா நதியைச்சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அத்திக்கடவு-கெளசிகா நதி மேம்பாட்டு சங்கத் தலைவர் செல்வராஜ் கூறும்போது, "கெளசிகா நதியைச் சார்ந்துள்ள கிராமங்களில் நிலத்தடி நீர், இயற்கைச் சூழல், பல்லுயிர்ப் பெருக்கம் மேம்படும் வகையில், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தினால், பொதுமக்கள், விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள், மேய்ச்சல் தொழில் செய்வோர் என பல லட்சம் பேர்பயனடைவர். விடுபட்ட தடுப்பணை களுடன், 180 ஏக்கர் பரப்பிலான சின்னவேடம்பட்டி ஏரியையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

மேலும், கெளசிகா நதியின் கரைகள் பல இடங்களில் மறைந்தே போய்விட்டன. சில இடங்களில் இந்நதி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி யுள்ளது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் சேகரமாகும் கழிவுநீர் நதியில் விடப்படுகிறது. எனவே, கழிவுநீரை சுத்திகரித்து, சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக ஆற்றோரத்தில் மரக்கன்றுகளை நடவு செய்து, பராமரிக்கலாம். இதனால் நதியைக் காப்பாற்ற முடியும். மேலும், பசுமைப் பரப்பும் அதிகரிக்கும்" என்றார்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, "கெளசிகா நதி தடுப்பணைகளில் நீர் நிரப்பும் வகையில், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் சில தடுப்பணைகள் சேர்க்கப்பட்டுள்ளன. திட்டத்தின் இரண்டாம் கட்டத்திலும் பல பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏதேனும் பகுதிகள் விடுபட்டிருந் தால், நிச்சயமாக அவை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x