

மது பாட்டில்கள் பதுக்கி வைப்பதைத் தடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. அதன்படி, டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு அதிகபட்சமாக 4.5 லிட்டர் மதுபானங்கள் வழங்கலாம் என விதிமுறைகள் இருந்தாலும், தற்போது ஒரு நபருக்கு 2 லிட்டர் மதுபானங்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதே நடைமுறையைத் தொடர்ந்து பின்பற்ற மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் டாஸ்மாக் நிர்வாகத்தை அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். எனவே அன்றைய தினம் கள்ளச்சந்தையில் மதுபானங்களை விற்பனை செய்ய, இப்போதே சிலர் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைப்பார்கள்.
இவ்வாறு பதுக்குபவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், மதுபானங்கள் பதுக்கி வைக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.