Published : 05 Mar 2021 03:16 AM
Last Updated : 05 Mar 2021 03:16 AM

கல்பாக்கம் நிலா கமிட்டியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி 14 கிராமங்களில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு

கல்பாக்கம் அடுத்த அணுபுரம் நகரியப் பகுதியில் நிலா கமிட்டியின் உத்தரவை திரும்ப பெறக் கோரி கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

கல்பாக்கம்

கல்பாக்கம் அணுமின் நிலைய சுற்றுப்புற கிராமங்களில் பத்திரப் பதிவு தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி, நிலா கமிட்டி எதிர்ப்பு இயக்கத்தினர் மற்றும் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் அணுமின் நிலைய நிர்வாகம் சார்பில், சுற்றுப்புற கிராமங்களில் கட்டுமானப் பணிகளை கண்காணிக்க கதிரியக்க பகுதி உள்ளூர் திட்ட குழுமம் (நிலா கமிட்டி) எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அணு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 5 கி.மீ தொலைவுக்குள் வரும் மாமல்லபுரம், புதுப்பட்டினம் உள்ளிட்ட 14 கிராமங்களை நிலா கமிட்டி வரையறை செய்துள்ளது. இப்பகுதிகளில், பேரிடர் மற்றும் அவசர காலங்களில் பொதுமக்களை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள இடங்களை பத்திரப் பதிவு செய்ய வேண்டாம் என நிலா கமிட்டி பரிந்துரை செய்தது. இதன்பேரில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட கிராமங்களில் பத்திரப் பதிவுக்கு தடை என அரசாணை வெளியிட்டுள்ளது.

நிலா கமிட்டியின் பரிந்துரைக்கு சுற்றுப்புற கிராம மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைக்காக நிலா கமிட்டி எதிர்ப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை ஒருங்கிணைத்து தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து மாமல்லபுரம், புதுப்பட்டினம், அணுபுரம், கல்பாக்கம் நகரியப் பகுதி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட 14 கிராமங்களில் உள்ள குடியிருப்புகள், கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் அணுமின் நிலைய வளாக முகப்பு பகுதியில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.

மேலும், இளையனார்குப்பம், அணுபுரம் நகரியம் ஆகிய பகுதிகளில் நிலா கமிட்டி எதிர்ப்பு இயக்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி கிராம மக்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதில், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதனால், அணுமின் நிலைய நிர்வாகம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, சுற்றுப்புற கிராம மக்கள் கூறியதாவது: நிலா கமிட்டியின் உத்தரவால் எங்களின் பாரம்பரிய சொத்துகள் செல்லாக் காசாக மாறியுள்ளன. பொதுமக்கள் போராட்டங்களை அறிவித்ததும், பத்திரப்பதிவுக்கு தடையில்லை என வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. எனினும், மேற்கண்ட கிராமங்களில் உள்ள நிலங்கள் மீது நம்பிக்கையில்லா நிலை ஏற்பட்டுள்ளதால், எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x