

சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையால் மாநகரின் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால் மாநகர பஸ்களை முழுமையாக இயக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், போதிய பஸ் வசதி கிடைக்காமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ் சாலை, நந்தம்பாக்கம் பூந்தமல்லி வரையிலான சாலை, வேளச்சேரி உட்புற சாலைகள், குன்றத்தூர் நெடுஞ்சாலை, பல்லாவரம் அனகாபுத்தூர் சாலை, முடிச்சூர், எண்ணூர், மணலி புதுநகர், வியாசர்பாடி, தண் டையார்பேட்டை உட்பகுதி சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. பஸ்கள் செல்ல முடியாத அள வுக்கு மேடு பள்ளங்கள் அதிகமாக இருக்கின்றன. இச்சாலைகளில் பஸ்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை. சில வழித்தடங்களில் கட் சர்வீஸ் பஸ்கள் இயக்கப்பட்டன. முழுமையான பஸ் வசதி கிடைக்காததால் பயணிகள் அவதிப்பட்டனர். ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரி களிடம் கேட்டபோது, ‘‘கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. மோசமான சாலைகளில் பஸ்களை இயக்குவதால், ஆங்காங்கே பிரேக் டவுன் ஆகிவிடுகின்றன.
புறநகர் பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கின்றன. கடந்த 2 நாட்களை விட, நேற்று அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டன. வாய்ப்புள்ள சில இடங்களுக்கு மாற்றுப் பாதைகளில் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.