Published : 04 Mar 2021 10:03 PM
Last Updated : 04 Mar 2021 10:03 PM

மூன்றாவது அணி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; மநீமவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: கே.எஸ்.அழகிரி

மூன்றாவது அணி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி உடன்பாடு இன்னும் எட்டப்படாத நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியுடன், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, "தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு இன்னும் திமுக எங்களை அழைக்கவில்லை. ஆனால் நாங்கள் மக்கள் நீதி மய்யத்துடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மூன்றாவது அணி என்பதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. தேர்தல் விதிமுறையை மீறியதாக ராகுல் காந்தி மீது பாஜக கூறியிருப்பதில் நியாயமில்லை. எந்தத் தேர்தல் விதிமுறையும் மீறப்படவில்லை. பாஜக இப்படித்தான் செய்யும்" என்றார்.

முன்னதாக தினேஷ் குண்டுராவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், "தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். நாளையோ அல்லது நாளை மறுநாளோ நல்ல முடிவு எட்டப்படும். அதைத் தாண்டி தொகுதிப் பங்கீடு தொடர்பான ஊகங்கள், வதந்திகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் பேசியதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது.

அதேபோல், ராகுல் காந்தி மீது பாஜக கொடுத்துள்ள தேர்தல் விதிமுறை மீறல் புகாரை தேர்தல் ஆணையம் நிச்சயம் நிராகரித்துவிடும். தமிழக மக்கள் ராகுல் காந்தி மீது அதிக பாசம் கொண்டுள்ளனர். அந்தப் பாசத்தை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது" என்றார்.

காங்கிரஸ் திமுக இழுபறி ஏன்?

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்துகளம் கண்டன. இதில் காங்கிரஸுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் 8 இடங்களில் மட்டுமே வென்றனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலை போன்று ஆகிவிடாமல் இருக்க காங்கிரஸுக்கு குறைந்த இடங்களே ஒதுக்க முடியும் என திமுக தலைமை கறாராக உள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு, வெற்றி வாய்ப்பு குறித்து ஐ-பேக் குழு திமுக தலைமையிடம் ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையிலேயே திமுக தொகுதிகளை ஒதுக்க முன்வருகிறது. ஆனால், ராகுல் காந்தி இருமுறை தமிழகத்தில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது அவருக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கை முன்வைத்து காங்கிரஸ் கூடுதல் இடங்களைக் கேட்டுவருகிறது.

இந்நிலையில், திமுக காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்ந்து இழுபறியாகவே இருக்கிறது. காங்கிரஸ் 27 தொகுதிகளில் பிடிவாதமாக நிற்க திமுக 22 என்றளவில் இறங்கிவந்திருக்கிறது.

திமுக கூட்டணியில் இதுவரை மமக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்துவிட்டது. காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், கொமதேக ஆகியன இன்னும் நிறைவு பெறவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x