Published : 04 Mar 2021 06:52 PM
Last Updated : 04 Mar 2021 06:52 PM

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு வழக்கு: நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு: வழக்கை மூன்றாவது நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை

சென்னை

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துகுவிப்பு புகாரில் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால் மூன்றாவது நீதிபதி அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழக பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அவரது மனுவில், “ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும், இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 6 கோடி ரூபாய் எனவும், அதே போல் திருத்தங்கல் பகுதியில் 23.33 லட்சத்துக்கு 2 வீட்டுமனைகளும்,4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார். இந்த சொத்தின் சந்தை மதிப்பு 1 கோடிக்கு அதிகமாகும்.

வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவே எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்”. எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், அறிக்கை தாக்கல் செய்யபட்டது. அதில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி 23.5.2011 முதல் 20.4.2013 வரையிலான காலத்தில் அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரி, ராஜேந்திரபாலாஜி மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும் விசாரணையை தொடர வேண்டியதில்லை, இது தொடர்பாக வழக்கை முடிக்கவும் பொது துறை உத்தரவிட்டதாக அறிக்கையில் லஞ்ச ஒழிப்புதுறை தெரிவித்து. இருந்தது.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜி அமைச்சரான பிறகு சேர்த்த சொத்து குறித்து மட்டும் விசாரிக்க கூடாது. ராஜேந்திர பாலாஜி 1996-ம் ஆண்டு திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்தது முதல் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். ஏனென்றால் அவர் 1996-ம் ஆண்டே பொது ஊழியராக இருந்துள்ளார். எனவே இந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும். என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ஆரம்ப கட்ட விசாரணையில் போதிய முகாந்திரம் இல்லை. மேலும் அரசு அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளாகவே அவரது வருமானம் உள்ளது”. எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் சத்தியநராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர். முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

பின்னர் தீர்ப்பை வாசித்த நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கு பதிந்து விசாரிப்பது செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போல் ஆகும் என்பதால், மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை என்று கூறி, மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தார்.

இதனால் இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பது குறித்து முடிவெடுக்க வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x