Published : 04 Mar 2021 06:56 PM
Last Updated : 04 Mar 2021 06:56 PM

அதிமுகவில் சாமானியர்களுக்கு ‘சீட்‘ கிடைக்குமா? ஜெ பாணியில் வேட்பாளர் தேர்வு நடக்குமா?- எதிர்பார்ப்பும்; கள நிலவரமும்

திமுகவில் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிளிலும் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களை எளிதாக கணித்துவிடலாம். அந்தளவுக்கு முன்னாள் அமைச்சர்கள், சிட்டிங் எம்எல்ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் அவர்கள் வாரிசுகளுக்கு வேட்பாளர் பட்டியலில் முன்னுரிமை கிடைக்கும்.

மிக அரிதாகவே சாதாரண நிர்வாகிகள் வேட்பாளராக்கப்படுவார்கள். ஆனால், அதிமுகவில் வேட்பாளர் தேர்வு அதற்கு தலைகீழாக இருக்கும். வேட்பாளர் பட்டியல் வெளியாகுவதற்கு கடைசி நிமிடங்கள் முன்வரை அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட தங்களுக்கு மீ்ணடும் ‘சீட்’ கிடைக்குமா என்பதும், இந்த தொகுதியில்தான் நாம் போட்டியிடுவோமா என்றும் அவர்களால் கணிக்க முடியாது.

கடைசி வரை அவர்களை ஜெயலலிதா பதற்றத்திலேயே வைத்து இருப்பார். அதுபோலவே, சாமானிய நிர்வாகிகள் கூட திடீரென்று வேட்பாளராகிவிடுவார்கள்.

அதோடு வெற்றிபெற்றால் அவர் அமைச்சர்களாகி கட்சியில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிடுவார்கள். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த கடந்த மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் திமுகவைப் போலவே அதிமுகவிலும் வாரிசுகள், முக்கிய நிர்வாகிகள், பணபலம் படைத்தவர்களுக்கே பெரும்பான்மையாக ‘சீட்’ வழங்கப்பட்டது.

அதனால், இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவில் அதேநிலையில்தான் வேட்பாளர்கள் தேர்வு இருக்குமா? அல்லது ஜெயலலிதா பாணியில் வேட்பாளர் தேர்வு இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு கட்சி நிர்வகிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், தங்களுக்கும், தாங்கள் கை காட்டும் நபர்களுக்கே ‘சீட்’ வழங்கப்படும் என்று கூறுவதாக நிர்வாகிகள் ஆதங்கமடைந்துள்ளனர்.

அவர்கள் கூறுவது போலலே, தமிழகம் முழுவதும் அதிமுகவில் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அமைச்சர்கள், சிட்டிங் எம்எல்ஏ-க்கள், முக்கிய நிர்வாகிகள் பலர், தற்போதே தங்களுக்குதான் தொகுதி ஒதுக்கப்பட்டதுபோல் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக மதுரையில் சென்றமுறை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் மேயரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளருமான விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, இந்த முறை திருப்பரங்குன்றத்தில் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது. இவர் வேட்பாளர் போல் ‘பூத்’வாரியாக நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார்.

அதுபோல, கூட்டுறவுத்துறை அமைச்சரும், மாநகரச் செயலாளருமான செல்லூர் கே.ராஜூ, தான் தற்போது எம்எல்ஏ-வாக உள்ள மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது. வேட்பாளர் போல் இவரும் தேர்தல் பணிகளை இந்தத் தொகுதியில் தொடங்கிவிட்டார்.

திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் தற்போது எம்எல்ஏ-வாக உள்ள வருவாய்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார், தேர்தல் பணிகளை கடந்த சில மாதத்திற்கு முன்பே தொடங்கிவிட்டார். அதுபோல், கிழக்கு தொகுதியில் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், தெற்கு தொகுதியில் ‘சிட்டிங்’ எம்எல்ஏ சரவணன், சோழவந்தானில் ‘சிட்டிங்’ எம்எல்ஏ மாணிக்கம் உள்ளிட்டோர் தங்களே மீண்டும் வேட்பாளராக போட்டியிடுவோம் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றனர்.

இதேநிலைதான் தமிழகம் முழுவதும் இருப்பதாக நிர்வாகிகள் ஆதங்கமடைந்துள்ளனர். தேர்தலில் ‘சீட்’ கிடைக்காவிட்டால் வேட்பாளர் கணவில் வலம் வரும் முக்கிய நிர்வாகிகள், கட்சி அறிவிக்கும் வேட்பாளர்களுக்கு எதிராக உள்ளடி வேலைப்பார்க்கும் வாய்ப்புள்ளது.

அதனால், அமைச்சர்கள் பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் ‘சீட்’ கொடுக்கும் முடிவிலேயே கட்சி மேலிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதா இருந்தபோது உளவுத்துறை, மாவட்டச்செயலாளர்கள் பரிந்துரைக்கும் பட்டியல், விருப்பமனு பட்டியல் உள்ளிட்டவற்றை பரிசீலனை செய்து ஜெயலலிதா யாரை வேண்டுமென்றாலும் வேட்பாளராக்கும் நிலை அதிமுகவில் இருந்தது.

ஏன் சில சமயம், முக்கிய நிர்வாகிகளைக் கூட அவர்களே எதிர்பார்க்காத தொகுதியில் போட்டியிட வைப்பார். அப்படிதான் சென்ற ஆட்சியில் முக்கிய அதிகார மையமாக வலம் வந்த முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி ஆகியோர் வேறு தொகுதியில் போட்டியிட வைத்து அவ்ரகள் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்போது அதுபோன்ற நிலை ஏற்பட வாய்ப்பே இல்லாததால் திமுகவைபோல் அதிமுகவிலும் வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே கணிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால், போட்டியிட விருப்பமனு கொடுத்து காத்திருக்கும் நிர்வாகிகள், சாதாரண பணபலமில்லாத அடிமட்ட நிர்வாகிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதையும், தாண்டி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா பாணியில் வேட்பாளர் பட்டிலை வெளியிடுவார்களா? என்ற நப்பாசையில் நிர்வாகிகள் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x