

அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் மகன் ராமச்சந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று (மார்ச் 4) ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதிமுகவில் சுமார் 8,200 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். இதில், தங்களுக்காக விருப்ப மனு அளித்தவர்களை அதிமுக தலைமைக் கழகம் நேர்காணலுக்கு அழைத்திருந்தது. காலை 9 மணி முதல் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், 9 பேர் கொண்ட குழுவின் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த நேர்காணலில் எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் மகன் ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,'' நான் 3 தொகுதிகளுக்கு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். ஆலந்தூர், ஆண்டிப்பட்டி, பல்லாவரம் ஆகிய 3 தொகுதிகளிலும் எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஏனெனில் எம்ஜிஆர் ஐயாவை அனைவருக்கும் பிடிக்கும். அவர் ஒரு வாழும் மேதை. அவர் வீட்டில் இருந்து வருகிற என்னை மக்கள் வரவேற்பர். அவரைப் பிடிக்கும் அனைவரும் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்வர்.
அதனால், அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்'' என ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.