Last Updated : 04 Mar, 2021 03:58 PM

 

Published : 04 Mar 2021 03:58 PM
Last Updated : 04 Mar 2021 03:58 PM

அரசியலை விட்டு ஒதுங்கிய சசிகலா; பாஜகவின் பங்கு இருக்கிறது: சீதாராம் யெச்சூரி

செய்தியாளர்களிடம் பேசிய சீதாராம் யெச்சூரி.

கோவை

அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

கட்சியின் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இன்று (மார்ச் 4) கோவை வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"பெட்ரோலிய பொருட்களின் விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. பிரதமர், பாஜகவின் தேர்தல் பிரச்சார செலவை சமாளிக்க மக்கள் மீது அதிக வரிகளை திணித்து சிரமத்துக்குள்ளாக்கி வருகின்றார்.

பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. எதற்காக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதோ அந்த நோக்கம் சிதைக்கப்படுகிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களை மேலும் பெரிதாக்குவதில் கவனம் செலுத்துகின்றனர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து 3 மாதங்களுக்கு மேல் விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். சுமார் 300 விவசாயிகள் இந்த போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் நிறைவேற்றப்பட்ட அந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லை.

நாடாளுமன்றத்தில் எங்கள் உறுப்பினர்கள் குறைவாக இருந்தாலும், அரசின் கொள்கைகளை எதிர்த்து எந்த போராட்டம் நடைபெற்றாலும், அதன் பின்புலத்தில் இடதுசாரிகள் இருப்பதாக கூறுகின்றனர். எங்கள் பலம் குறைவாக இருந்தால், எங்களைப்பற்றி அவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? நாங்கள் களத்தில் வலுவாக இருப்பதால்தான் கவலைப்படுகின்றனர். எனவே, நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் நாங்கள் எவ்வளவு உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறோம் என்பது முக்கியம் அல்ல.

பிரதமர் மோடி சிரிப்பதுபோன்று பெட்ரோல் நிலையங்களில் உள்ள விளம்பர பேனர்கள் விதிமீறல் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இத்தனை நாட்கள் அந்த படங்கள் இருந்தபோது அது விதிமீறலாக தெரியவில்லையா. தற்போது ஏன் விதிமீறல் என கூறுகிறார்கள் தெரியுமா. பெட்ரோல் நிரப்ப செல்லும்போது அந்த விளம்பர பேனரை பார்த்து மக்கள் சபிப்பார்கள் என்பதால், மோடியைக் காப்பாற்றுவதற்காக பேனரை அகற்றுமாறு தெரிவித்துள்ளனர்.

பாஜக நாடாளுமன்றத்தில் எதைச் சொன்னாலும் அதை அதிமுக அரசு ஆதரிக்கிறது. அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்காக ஒன்றிணைவோருடன் இணைந்து பணியாற்றிவோம்.

சசிகலா அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளதை பாஜகவினர் வரவேற்கிறார்கள் என்றால், அதில் அவர்களின் பங்கு இருக்கிறது என்றுதான் அர்த்தம்".

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x