

ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று சசிகலாகோரிக்கை வைத்துள்ளார், அது அதிமுகவின் வெற்றி ஆகும், அதே கனவை நிறைவேற்ற தினகரனும் முன் வரவேண்டும் என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி வேண்டுகோள் வைத்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியதாவது:
“ஜெயலலிதாவின் கனவு ஒன்றுபட்ட அதிமுக, உறுதியான அதிமுக. ஆனால் நமது அரசியல் எதிர்ப்பாளர்கள் அதிமுகவை பிளவுப்படுத்தி அதன் மூலம் தாங்கள் அதிகாரத்திற்கு வர முயல்கின்றனர். சசிகலா ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என சசிகலா வேண்டுகோள் வைத்துள்ளார் அதை வரவேற்கிறோம்.
ஜெயலலிதாவின் கனவு என்ன ஒன்றுபட்ட அதிமுக, முன்னேறிய தமிழகம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான என்டிஏ அணி ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றி வருகிறோம். தினகரன் அதிமுக வாக்குகளை பிரிக்க வாய்ப்புண்டு.
ஆனால் தினகரனும் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவார் என நம்புகிறேன். நேற்று நீங்கள் அனைவரும் சசிகலாவை அதிமுகவில் இணைக்க முயற்சிப்பீர்களா என்று கேட்டீர்கள் இன்று என்ன நடந்துள்ளது. நாங்கள் சசிகலாவை விலக நிர்பந்திக்கவில்லை. அனைத்தும் வதந்தி என்பது உண்மையாகியுள்ளது.
நாங்கள் அதிமுகவை பிளக்க நினைப்போமா? ஜெயலலிதாவின் கனவை சிதைக்க நினைப்போமா? எங்கள் முக்கிய நோக்கம் திமுக கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும், அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பது முக்கிய நோக்கம். திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் குடும்ப நலனை மட்டுமே யோசிப்பார்கள். அதிமுக வந்தால் தமிழக நலன் குறித்து யோசிப்பார்கள்”.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திமுக வீழ்த்தப்பட வேண்டும், ஜெயலலிதாவின் கனவு நிறைவேற வேண்டும் என சசிகலா அறிவித்துள்ளது அதிமுகவின் வெற்றி பற்றித்தான் என பாஜக தரப்பில் கூறி தினகரனையும் அதிமுக அணிக்கு வருமாறு அழைத்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தலைவர்கள் டிடிவி தினகரன் இணைப்பு சாத்தியமே இல்லை என்று கூறிவரும் நிலையில் கூட்டணி கட்சி தினகரனை இணைக்க அழைப்பது பாஜக அமமுக-அதிமுக இணைப்பை வலியுறுத்துவது உறுதியாகியுள்ளது.
அதே நேரம் டிடிவி தினகரனும் தனது தலைமையை ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என அறிவித்துள்ளார். இந்நிலையில் இதுபோன்ற வேண்டுகோள்கள் மீண்டும் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.