Published : 04 Mar 2021 12:50 PM
Last Updated : 04 Mar 2021 12:50 PM

மதிமுகவுடன் இன்று மாலை மீண்டும் பேச்சு : திமுக அழைப்பு

மதிமுக உள்ளிட்ட தோழமைக்கட்சிகள் திமுகவுடன் நடத்திய பேச்சுவர்த்தையில் இழுபறி நீடித்ததால், ஒன்றாகவும், தனியாகவும் ஆலோசனை நடத்திய நிலையில் நிலைமையின் தீவிரம் உணர்ந்து மதிமுகவை மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளது திமுக. இன்று மாலை மதிமுகவுடன் பேச்சு வார்த்தை தொடங்க உள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றாக பல்வேறு போராட்டங்களில் களம் கண்ட அவர்கள் தோழமைக் கட்சிகளாக ஒன்றிணைந்தனர். அந்தக்கூட்டணி சுமுகமான முறையில் தொகுதி பங்கீடு செய்து மக்களவை தேர்தலை 2019-ம் ஆண்டு சந்தித்தது. பெரு வெற்றியும் பெற்றது.

அதே கூட்டணி அதன் பின்னரும் பல போராட்டங்களை ஒருங்கிணைந்து நடத்தியது. அதிமுக கூட்டணியில் பல சலசலப்புகள் இருந்தாலும் திமுக கூட்டணியில் மட்டும் எவ்வித சலசலப்புமின்றி கூட்டணி தொடர்ந்தது. ஆனால் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிய வேளையில் கூட்டணியில் வெடித்தது பிரச்சினை. இதற்கு காரணம் நாங்கள் அல்ல முழுக்க முழுக்க திமுகவின் அணுகுமுறைதான் என தோழமைக்கட்சிகள் பக்கம் தெரிவிக்கின்றனர்.

இதில் ஸ்டாலினை முதல்வராக்குவேன் என சபதமெடுத்த வைகோவும் அப்செட்டில் உள்ளார். கூட்டணியில் கவுரவமான தொகுதிகளை பெற வேண்டும் என நினைக்கும் வைகோவுக்கு திமுக மதிமுகவுக்கு 5 தொகுதிக்குள் ஒதுக்கியது பெரிய அதிர்ச்சியாக இருந்துள்ளது. 19 தொகுகள் குறைந்தது 12 தொகுதிகளையாவது கேட்டுப்பெற வேண்டும் என்பது மதிமுகவின் எண்ணமாக இருந்தது.

12 தொகுதிகளில் போட்டியிடுவதன் மூலம் தற்போதுள்ள அலையில் கணிசமான இடங்களை வெல்லலாம் பம்பரம் சின்னமும் திரும்ப கிடைக்கும் என மதிமுக முடிவெடுத்தது. ஆனால் திமுக தரப்பில் உறுதியாக இருந்ததால் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் முடிந்தது. மீண்டும் அழைக்கிறோம் என அறிவித்து மதிமுக நிர்வாகிகள் காத்திருந்த நிலையில் அழைப்பு வராததால் மதிமுக தரப்பில் அதிருப்தி உருவானது.

மற்ற கட்சிகளும் இதே நிலையில் தொகுதிகள் குறைக்கப்பட்டதால் என்ன நிலைப்பாடு எடுக்கலாம் என அனைவரும் சேர்ந்து முடிவெடுக்கலாமா என யோசித்துவந்தனர். இந்நிலையில் மதிமுக தனது நிலைப்பாட்டை முடிவெடுக்க உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தை வரும் 6-ம் தேதி கூட்டலாம் என வைகோ அறிவித்தார்.

இந்நிலையில் மதிமுகவை பேச்சு வார்த்தைக்கு வரும்படி திமுக மீண்டும் அழைத்துள்ளது. இன்று மாலை மீண்டும் திமுக-மதிமுக இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. அதன் முடிவை வைகோவிடம் தெரிவித்து முடிவு காணப்படும் என தெரிகிறது. இன்று நடக்கும் பேச்சு வார்த்தையில் அதிகப்படியாக 7 தொகுதிகள் முடிவாகும் என தெரிகிறது. ஆனாலும் பழைய மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் ஒருமித்த முடிவெடுத்தே இயங்குவார்கள் என தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x