மனைவியைக் கொலை செய்த பேராசிரியருக்கு தூக்கு தண்டனை: சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

மனைவியைக் கொலை செய்த பேராசிரியருக்கு தூக்கு தண்டனை: சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

மனைவியை அம்மிக்கல்லால் தாக்கியும், கத்தியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்த பேராசிரியருக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அண்ணாநகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கண்ணன்(40). இவரது மனைவி மோகனாம்பாள்(37). இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். கண்ணன் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மோகனாம்பாள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கணவன் கண்ணனை உரிய மரியாதையுடன் நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. வசதி குறைவு பிரச்சினை அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும் ஒன்றாக மாறியிருந்தது.

குடும்பத்தில் தினமும் பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி வாக்குவாதம் முற்றியது, ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி பேசிய நிலையில் கண்ணன் மனைவி மோகனாம்பாளை தாக்கியுள்ளார். கணவன், மனைவி இருவரும் மாறிமாறி அடித்துக் கொள்ள ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கண்ணன் மனைவியை அம்மிக் கல்லால் தாக்கியுள்ளார்.

அதில் மயங்கி கீழே விழுந்த மனைவி மீது ஏறி அமர்ந்து இரக்கமில்லாமல் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் கண்ணன் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை 4-வது அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.ஆர்.வி.ரவி முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் வி.முரளிகிருஷ்ணன் மனைவியை ஈவு இரக்கமின்றி கொலை செய்த கண்ணனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதாகவும், உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென வாதிட்டார்.

கண்ணன் தரப்பிலும் வாதம் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்டப்பின்னர் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பேராசிரியர் கண்ணன் தனது மனைவியைக் கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி கண்ணனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in