

விருப்பமனு அளிக்கும் தேதியை 2 நாட்களுக்கு முன்னரே நிறுத்திய அதிமுக இன்று நேர்க்காணல் என அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 8200 பேர் விருப்பமனு அளித்துள்ள நிலையில் ஒரே நாளில் அனைவரையும் நேர்க்காணல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் திமுக, அதிமுக அணிகள் இடையே கூட்டணிக் கட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. திமுக, அதிமுக தவிர மக்கள் நீதி மய்யம் மற்றும் சரத்குமார் கட்சிக் கூட்டணி, நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகியவை அணிவகுத்து நிற்கின்றன. இந்நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் ஒருபுறம் தங்கள் கட்சியின் வேட்பாளர்களைத் தயார் செய்துகொண்டே மறுபுறம் கூட்டணிக்கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அதிமுகவில் பாமக மட்டுமே 23 தொகுதிகளில் போட்டி என உறுதியாகியுள்ள நிலையில், பாஜக, தேமுதிக, தமாகாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை பெரும் இழுபறியாக உள்ளது. இதனிடையே தங்கள் கட்சியின் வேட்பாளர் தேர்வுக்கு விருப்பமனு அளித்தவர்களை நேர்க்காணல் செய்யும் நோக்குடன் அதிமுக தலைமை தனது பணியைத் தொடங்கியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது இதுப்போன்ற சந்தர்ப்பங்களில் கூட்டணிக்கட்சிகள் இழுபறி இருக்கும் நேரத்தில் தனது கட்சியின் வேட்பாளரை அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்யவைக்கும் வரை சென்றதும், உடன்பாடு ஏற்பட்டதும் வேட்பாளரை வாபஸ் வாங்க வைத்ததும் நடந்துள்ளது. ஆகவே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இருந்தாலும் வேட்பாளரை இறுதிப்படுத்தும் பணியும் மறுபுறம் நடக்கிறது.
அதிமுகவில் 8200 பேர் விருப்பமனு அளித்திருந்தனர். அவர்களை ஒரே நாளில் நேர்க்காணல் செய்ய அதிமுக தலைமை முடிவெடுத்து இன்று அழைப்பு விடுத்துள்ளது. அதிமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்கள் தங்களது விவரங்களுடன் ஒரிஜினல் ரசீதுடன் தலைமை அலுவலகம் வர உத்தரவிடப்பட்டு இன்று காலையே தொண்டர்கள் குவிந்து அதிமுக தலைமை அலுவலகமே பரபரப்புடன் காணப்படுகிறது.
காலை 9-00 மணிக்கு சரியாக ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் நேர்க்காணலை தொடங்கினர். அவர்கள் இருவர் தலைமையில் 9 பேர் கொண்ட அணி வேட்பாளர்களிடம் நேர்க்காணல் நடத்துகிறது. 8200 பேர் ஒரே நாளில் என்றால் எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை. ஒரு நிமிடத்திற்கு ஒரு நபரை பார்த்தாலும் ஒரு மணி நேரத்திற்கு 60 பேரை மட்டுமே பார்க்க முடியும்.
இரவு 9 மணி வரை 12 மணி நேரம் பார்த்தாலும் 720 பேரை மட்டுமே பார்க்க முடியும். இடையில் உணவு இடைவேளை என பல உண்டு. 8200 பேரை பார்ப்பது என்பது எப்படி சாத்தியம் என தெரியவில்லை.