

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திரு வள்ளூர், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கரோனா வைரஸ் தொற்று குறையவில்லை என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா பரவலைத் தடுக்க கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதனால் அந்த மாநிலங்களில் மத்திய உயர்நிலைக் குழு ஆய்வு செய்து வருகிறது. இதன்படி, மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் அருண்குமார் தலைமையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் சி.பழனிவேல், தினேஷ்பாபு ஆகியோர் கொண்ட குழுவினர் 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் தமிழகம் வந்தனர்.
முதல் நாளில் தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், தடுப்பூசிகள் குறித்து சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். 2-வது நாளாக நேற்று சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசுபன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் செயல்பாடுகளை பார்வையிட்டனர்.
அப்போது செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவமனை இயக்குநர் விமலா, ஒருங்கிணைப்பு அதிகாரி ஆனந்த் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இதையடுத்து திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் குழுவினர் ஆய்வு செய்தனர். இன்று தலைமைச் செயலாளரை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.
முன்னதாக சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
சுகாதாரப் பணியாளர்களில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முன்களப் பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டி வரும் நிலையில், முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் பாதிப்புள்ளவர்கள் ஆர்வமாக ஊசி போட்டுக் கொள்வது பாராட்டத்தக்கது. சராசரியாக தினமும் 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில் 1000 தெருக்களில் இருந்து தினமும் 5 அல்லது 6 பேர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல், திருவள்ளூர், காஞ்சி புரம், செங்கல்பட்டு, திருப்பூர், கோவை ஆகிய 5 மாவட்டங்களில் பாதிப்பு குறையவில்லை.
திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள், பேருந்து, ரயில் பயணம் மேற்கொள்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். கரோனா போய்விட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்.
அறிகுறி இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். தடுப்பூசி காலாவதியாகிவிட்டது என்று தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். தமிழகத்துக்கு 26 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.