ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு காது கேளாமை பிரச்சினை : அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் தகவல்

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்ற உலக செவித்திறன் தின நிகழ்ச்சியில் எம்என்ஜே குரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.சுல்தான் வழங்கிய காது கேட்கும் கருவிகளை மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மெட்ராஸ் இஎன்டி பவுண்டேஷன் இயக்குநர் மோகன் காமேஷ்வரன், மருத்துவமனை டீன் பி.பாலாஜி ஆகியோர் ஏழை குழந்தைகளுக்கு பொருத்தினர். காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) துறை தலைவர் கவுரி சங்கர் உடன் உள்ளார். படம்: பு.க.பிரவீன்

Updated on
1 min read

இந்தியாவில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு காது கேளாமை பிரச்சினை உள்ளது என்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) துறை தலைவர் கவுரி சங்கர் தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி ஆண்டுதோறும் மார்ச் 3-ம் தேதி ‘உலக செவித்திறன் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் செவித்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் கவுரி சங்கர் முன்னிலை வகித்தார். மருத்துவமனை டீன் பி.பாலாஜி, கல்லூரியின் துணை முதல்வர் ஜமிலா ஆகியோர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மெட்ராஸ் இஎன்டி ஃபவுண்டேஷன் இயக்குநர் மோகன் காமேஷ்வரன் ஆகியோர், பிறவியிலேயே காது கேளாத குழந்தைகளுக்கு ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ கருவி பொருத்துவது குறித்து விரிவாகப் பேசினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற எம்என்ஜே குரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.சுல்தான், ஏழை குழந்தைகளுக்கு பொருத்துவதற்காக தலா ரூ.10 ஆயிரம் மதிப்புடைய 100 காது கேட்கும் கருவிகளை மருத்துவமனைக்கு வழங்கினார்.

காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் கவுரி சங்கர் பேசும்போது, “இந்தியாவில் காது கேளாமை பிரச்சினை அதிகரித்து வருகிறது. பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே காது கேளாமை பிரச்சினை உள்ளது. ‘காக்ளியர் இம்பிளாண்ட்’ கருவி பொருத்துவதன் மூலம் அந்த குழந்தைகளுக்கு காது கேட்கும் திறனை கொண்டு வரலாம். பின்னர் பேச்சு பயிற்சியின் மூலம் குழந்தைகள் பேசத் தொடங்கிவிடும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in