Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM

கதிரியக்க அச்சம் காட்டி 14 கிராமங்களில் நில விற்பனைக்கு தடை - தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் : நிலா கமிட்டி எதிர்ப்பு இயக்க ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு

கல்பாக்கம் அணுமின் நிலைய சுற்றுப்புற கிராமங்களில் பத்திரப்பதிவு தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நிலா கமிட்டி எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் பல்வேறு பிரிவுகளில் அணுமின் நிலையங்கள் மற்றும் அணு ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அணுமின் நிலையம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளின் பாதுகாப்பு கருதி குடியிருப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை கண்காணிப்பதற்காக கதிரியக்க பகுதி உள்ளூர் திட்ட குழுமம் (நிலா கமிட்டி) ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள அணு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக சுற்றுப்புற 5 கி.மீ. தொலைவுக்கு வரும் 14 கிராமங்களை நிலா கமிட்டி வரையறை செய்துள்ளது. பேரிடர் மற்றும் அவசர காலங்களில் மக்களை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படும் என்பதால், வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள இடங்களை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என நிலா கமிட்டி உறுப்பினர் செயலர், மாவட்ட பதிவாளருக்கு அரசாணையை இணைத்து கடிதம் வழங்கினார்.

நிலா கமிட்டியின் உத்தரவுக்கு சுற்றுப்புற கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக `நிலா கமிட்டி எதிர்ப்பு இயக்கம்' என்ற பெயரில் பாதிக்கப்படும் கிராமங்களை சேர்ந்த பொதுமக்களை ஒருங்கிணைத்து குன்னத்தூர் கிராமத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், கிராம மக்கள் அணுமின் நிலைய நிர்வாகம் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். மேலும், தேர்தல் நடைபெற உள்ளதால் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் நிலா கமிட்டியின் உத்தரவுக்கு தடை விதிக்கப்படும் என வாக்குறுதி அளிக்க வேண்டும் எனக் கூறினர். பின்னர், தேர்தல் புறக்கணிப்பு, சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மேலும், இன்று (மார்ச் 4) முதல் ஒவ்வொரு வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமதாஸ் எதிர்ப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள 14 கிராமங்களிலும் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய மத்திய அரசு தடையாணை பிறப்பித்துள்ளது.

இந்த அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கிய 38 ஆண்டுகளில் இத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.

அணுமின் நிலையங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அது உண்மை என்றால், 14 கிராமங்களில் நிலங்களை வாங்கவும், விற்கவும் கதிர்வீச்சு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி தடை விதிப்பது பெருந்தவறு ஆகும். ஒருவேளை உண்மையாகவே கதிர்வீச்சு அச்சம் உள்ளதென்றால், தடை விதிக்கவேண்டியது அப்பாவி மக்களின் நில விற்பனைக்கு அல்ல. கல்பாக்கம் அணுமின் நிலையம் இயங்குவதற்குத்தான்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x