

தேர்தலை அமைதியாக நடத்தவும், மதுபானம், சாராயக் கடத்தலை தடுக்கவும் தமிழகம், புதுச்சேரி இரு மாநில அதிகாரிகளும், காவல்துறையும் இணைந்து பணியாற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுச்சேரி தலைமை செயலக கருத்தரங்கு கூடத்தில் நேற்று நடைபெற்றது.
புதுவை கலால் துறை ஆணையர் அபிஜித் விஜய் சவுத்ரி தலைமை தாங்கினார். ஏடிஜிபி ஆனந்தமோகன், சீனியர் எஸ்பி பிரதிக்ஷா கொடாரா, கலால் துணை ஆணையர் சுதாகர் மற்றும் இரு மாநில கலால் அதிகாரிகள், போலீஸ் எஸ்பிக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின்னர் கலால் ஆணையர் அபிஜித் விஜய் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘மதுபானம் கடத்தலை தடுக்க மது மற்றும் சாராயக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த உத்தரவிட்டுள்ளோம். தனி நபருக்கு மதுபானம், சாராயத்தை அரசு நிர்ணயித்த அளவு தான் விற்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறோம்.
மொத்தமாக மதுபானம் யாராவது வாங்கினால் அது பற்றி கலால் துறைக்கு தகவல்தெரிவிக்கவும் உத்தரவிட்டுள் ளோம்.
மதுபான கடத்தல், மொத்தமாக மதுபானங்களை விற்பது உள்ளிட்டவற்றை கண்காணிக்க புதுவை,காரைக்கால் பகுதியில் முறையே 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மது கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும்’’ என்றார்.