தமிழகத்தில் மழை பலி 121 ஆக அதிகரிப்பு; வட கடலோரம், உள் மாவட்டங்களில் மழை வாய்ப்பு

தமிழகத்தில் மழை பலி 121 ஆக அதிகரிப்பு; வட கடலோரம், உள் மாவட்டங்களில் மழை வாய்ப்பு
Updated on
4 min read

தமிழகத்தில் கனமழை - வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. வானிலை முன்னறிவிப்பைப் பொறுத்தவரையில், வட கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை எதிரொலியாக வெள்ளத்தில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் இறந்த 10 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று இன்று (வெள்ளிக்கிழமை) முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுவரை வெளியான முதல்வர் நிவாரண உதவி அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைகளின் அடிப்படையில், தமிழக மழை பலி எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது. இதில், கடலூரில் மட்டும் ஏறத்தாழ 50 பேர் உயிரிழந்தனர்.

அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் முழுமையாக இல்லாத நிலையில், தமிழக மழை பலி அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அரசு தரப்பு தெரிவிக்கிறது.

மேலும், தமிழகம் முழுவதும் வெள்ள பாதிப்புகளால் ஏற்பட்ட வீடு, குடிசைகள் சேதங்கள், கால்நடை இழப்புகள், பயிர்ச் சேதங்கள், படகுகள் சேதம் உள்ளிட்டவை குறித்து தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது.

வானிலை முன்னறிவிப்பு

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மறைந்துவிட்ட நிலையிலும், அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, நீலகிரி மற்றும் நெல்லை, குமரி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல், கனமழை வரை பெய்தது.

இந்நிலையில், அரபிக்கடல் தாழ்வுப் பகுதி அதே இடத்தில் தொடர்வதால் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வெள்ளிக்கிழமை கூறும்போது, " லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் கடந்த 24 மணி நேரம் (நேற்று காலை முதல் இன்று காலை வரை) தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 13 செ.மீ., கேத்தி 12, திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 12, சென்னை விமான நிலையம், தாம்பரம் 4, நுங்கம்பாக்கம், அண்ணா பல்கலை.யில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தாழ்வு பகுதியின் காரணமாக தமிழக வட கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

உள் மாவட்டங்களில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து இரு தினங்களுக்குப் பின் மழை குறைய வாய்ப்புள்ளது" என்றார் அவர்.

இயல்பு நிலைக்குத் திரும்பாத திருவள்ளூர்

வடகிழக்குப் பருவமழை திருவள்ளூர் மாவட்டத்தில் சற்று ஓய்ந்தும் பிறகு பொழிந்தும் வருகிறது. இதனால் நீர்நிலைகளில் எல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், திருவள்ளூர் மாவட்டம் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதன் காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் ஆவடி - பருத்திப்பட்டு ஏரி, பூந்தமல்லி - பாரிவாக்கம் ஏரி, மப்பேடு - திருமணிக்குப்பம் ஏரி, எல்லாபுரம் - அத்திவாக்கம் ஏரி என 10-க்கும் மேற்பட்ட ஏரிகளின் கரைகள் உடைந்து, பல கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து வருகிறது. இதில், அத்திவாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களில் வீடுகள் மட்டுமல்லாமல் ரேஷன் கடைகள், பள்ளிக் கட்டிடங்கள் போன்ற இடங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளன.

திருக்கண்டலத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஓராண்டுக்கு முன் 33 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட தடுப்பணையின் பக்கவாட்டு சுவரும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், அருகில் உள்ள அண்ணாநகர்- இருளர் குடியிருப்புகள் நீரில் மூழ்கின. ஏரிகளின் கரை உடைப்பு மற்றும் கொசஸ்தலை ஆற்றின் கரை உடைப்பு உள்ளிட்டவைகளால் பா திக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள், வெளியூர்களிலும், பாதுகாப்பு மையங்களிலும் தங்கி வருகின்றனர்.

வெள்ள நீரால், திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி என, மாவட்டத்தின் பல பகுதிகளில் 13 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்ட நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

உதகை, குன்னூரில் ரயில் சேவை பாதிப்பு

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூரில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை இடைவிடாது பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், தண்டவாளத்தில் பாறைகள் விழுந்து மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை மரப்பாலம் மற்றும் பிற பகுதிகளில், அவ்வப்போது ஏற்பட்ட சிறிய அளவிலான மண் சரிவை, நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். இதனால், சாலைப் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரயில் பாதை ஹில்குரோவ் - ஆடர்லி இடையே பெரிய அளவிலான பாறை விழுந்தது கண்டறியப்பட்டது. இதனால், மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை குன்னூர் புறப்பட்ட மலை ரயில், கல்லாறில் நிறுத்தப்பட்டது. சுற்றுலா பயணிகள், மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சீரமைப்பு காரணங்களாலும், காலநிலையை கருதியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் (நவ.20), நாளையும் (நவ.21) மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே துறை அறிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக உதகை ஏரியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. நடைபாதையை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி, ஓசூரில் மீண்டும் கனமழை

கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 49 ஏரிகளும், ஊரக பகுதிகளில் 200 ஏரிகளும் நிரம்பியது. ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மழை பொழிவு இருந்தும் பல ஏரிகள் நிரம்பவில்லை.

ராஜபாளையத்தில் பாதிப்பு

ராஜபாளையம் அருகே ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது. மேற்குத் தெடர்ச்சிமலையில் தொடர்மழை காரணமாக ராஜபாளையம் அருகே உள்ள புத்தூரில் தேவியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள அருந்ததியர் காலனியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். சிலரின் வீடுகளுக்கு உள்ளேயும் வெள்ள நீர் புகுந்தது.

போரூர் ஏரியில் சாலையை துண்டித்து உபரிநீர் வெளியேற்றம்

போரூர் ஏரி நிரம்பியதைத் தொடர்ந்து சாலையை துண்டித்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மவுலிவாக்கம் - மாங்காடு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

கடந்த 15-ம் தேதி மாலை ஏரி முழுகொள்ளளவை எட்டியது. நேற்று பெய்த மழையால் ஏரிக்கு வினாடிக்கு 400 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, ஏரியிலிருந்து உபரி நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், போரூர் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறுவதற்கு, உரிய வழியில்லை.

இதனால், மவுலிவாக்கம் – மாங்காடு சாலையில், பரணிபுத்தூர் பாலம் அருகில் சாலை துண்டிக்கப்பட்டது. அதன்வழியாக உபரி நீரை பொதுப்பணித்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். இதன்படி, வினாடிக்கு 400 கனஅடி நீர் வெளியேறி வருகிறது. இதனால், மவுலிவாக்கம் – மாங்காடு இடையே போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அந்த வழியில் சென்று வந்த வாகனங்கள் அய்யப்பன்தாங்கல் வழியாக சுற்றிச் சென்று வருகின்றன.

தீயணைப்பு துறையினருக்கு நெகிழ்ச்சியுடன் மக்கள் நன்றி

இதனிடையே, சென்னை புறநகர் பகுதிகள் உட்பட பல மாவட்டங்களிலும் மழை, வெள்ள மீட்பு பணிகளில் இரவு பகலாக பணியாற்றிய தீயணைப்பு துறையினருக்கு மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிவருகின்றனர்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் இயக்குநர் மற்றும் உதவி தலைமை இயக்குநர் ஆர்.சி.குடாவ்லா மேற்பார்வையில், வடமேற்கு மண்டலத்தில் துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் தலைமையில் சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, குளோபல் மருத்துவமனை மற்றும் மேடவாக்கம் சாலையின் பல பகுதிகளிலும் வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சி நகரம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், தையூர், வேலூர் மாவட்டம் அரக்கோணம், காட்பாடி, நாட்றம்பள்ளி, குடியாத்தம், திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் நகரம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆகிய இடங்களில் அதிகாரிகள், வீரர்கள் என 200 பேர் 17 தீயணைப்பு வாகனங்கள், 6 ரப்பர் படகுகள், மீன்பிடி படகுகள் உதவியுடன் இரவு பகலாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

சோழிங்கநல்லூர் பகுதியில் 1,200 பேரையும், மற்ற இடங்களில் 2,100 பேரையும் மழை வெள்ள ஆபத்துகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 361 விலங்குகள் காப்பாற்றப்பட்டன. மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு பல உயிர்களைக் காப்பாற்றிய தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in