

அருப்புக்கோட்டையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படும் சிபிசிஐடி போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் சிபிசிஐடி ஐஜி, எஸ்பி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டை அத்திபட்டியைச் சேர்ந்த மோகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
அருப்புக்கோட்டையில் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் நூற்பாலை நடத்தி வந்த மோகன் 2008-ல் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கை அரசியல் காரணங்களுக்காக அருப்புக்கோட்டை தாலுகா போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை. இதனால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் 2013-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் நான் 6-வது சாட்சியாகவும், என் சகோதரி கலாராணி 51-வது சாட்சியாகவும் சேர்க்கப்பட்டோம்.
இந்த வழக்கில் அருப்புக்கோட்டை ஒன்றிய அதிமுக நிர்வாகி யோக வாசுதேவன் ஒரு எதிரியாக உள்ளார். அவரும், அவரது ஆட்களும் என்னை சாட்சியளிக்கக்கூடாது, அதையும் மீறி நீதிமன்றத்தில் சாட்சியளித்தால் கொலை செய்வதாக மிரட்டினர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் சாட்சிகள் பட்டியலில் இருந்து என்னையும், என் சகோதரியையும் சிபிசிஐடி போலீஸார் நீக்கியுள்ளனர். உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ததால் என் பெயரை மீண்டும் சாட்சிகள் பட்டியலில் சேர்த்தனர்.
சிபிசிஐடி போலீஸார் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றனர். எனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. எனவே கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படும் சிபிசிஐடி போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஹேமலதா விசாரித்து, சிபிசிஐடி-ஐஜி மற்றும் எஸ்பி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப். 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.