புதுச்சேரி ஆளுநரின் ஆலோசகர்களுக்கு சட்டப்பேரவையில் அமைச்சர்களின் அறை ஒதுக்கீடு
மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்த துணைநிலை ஆளுநரின் ஆலோசகர்கள் இருவருக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் அமைச்சர்களின் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பணியை இன்று தொடங்கிய நிலையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை நேரில் வந்து வாழ்த்துத் தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு அண்மையில் கவிழ்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. அதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல் முறையாகத் துணைநிலை ஆளுநர் தமிழிசை கேபினெட் அறையில் கூட்டம் நடத்தினார். இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநருக்கு ஆலோசகர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரமவுலி, ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் பிரகாஷ் மகேஷ்வரி ஆகியோரை நியமித்தது. இந்நிலையில் ஆலோசகர்கள் இருவருக்கும் புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள அமைச்சர்களின் அறைகள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆட்சியில் ஷாஜகான் பயன்படுத்தி வந்த அமைச்சர் அறை சந்திரமவுலிக்கும், மல்லாடி கிருஷ்ணராவ் பயன்படுத்தி அமைச்சர் அறையானது ஆனந்த் பிரகாஷ் மகேஷ்வரிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் இன்று பணிகளைத் தொடங்கினர். இதையடுத்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சட்டப்பேரவைக்கு வந்து இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து ஆலோசனை நடத்தினார்.
