Published : 03 Mar 2021 06:31 PM
Last Updated : 03 Mar 2021 06:31 PM

கம்யூனிஸ்ட் - திமுகவுக்கிடையில் சிக்கல் இல்லை: பேச்சுவார்த்தை சுமுகமாக தொடர்கிறது; முத்தரசன் விளக்கம்

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக தொடர்கிறது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.6 அன்று நடைபெற உள்ளது. இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ளதால், அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை வேகமாக மேற்கொண்டு வருகின்றன.

கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது, தொகுதிப் பங்கீடு, பிரச்சார வேலைகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பது, போட்டியிடும் தொகுதிகள் - வேட்பாளர்களை இறுதி செய்வது ஆகிய பணிகளைக் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

திமுக கூட்டணியில் இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன், இரு நாட்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் - திமுக, இரு கட்சிகளுக்கிடையில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியானது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக, முத்தரசன் இன்று (மார்ச் 3) வெளியிட்ட அறிக்கை:

"திமுகவின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தையில் கம்யூனிஸ்ட் - திமுகவுக்கிடையில் சிக்கல் நிலவுவது போலும் பேச்சுவார்த்தையில் முறிவு ஏற்படுவது போலும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்படுகின்றன. அத்தகைய செய்திகளில் உண்மையில்லை என்பதுடன் அது குழப்பம் ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுமக்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்கிறது. தொகுதி பகிர்வு பேச்சுவார்த்தை சுமுகமாக தொடர்கிறது".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x