திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தி அறிவுறுத்தலால் பிடிவாதமா?

திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தி அறிவுறுத்தலால் பிடிவாதமா?
Updated on
1 min read

திமுக கூட்டணியில் அதிக இடங்களைக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளிடம் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனாலேயே காங்கிரஸ் நிர்வாகிகள் பிடிவாதமாக கூடுதல் தொகுதி கோருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களிலும் 3-ம் கட்டமாக ராகுல்காந்தி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இந்தச் சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு முந்தைய நாளில் தமிழக சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் இந்த சுற்றுப்பயணத்தை வெற்றிப்பயணமாக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்தனர்.

தங்கள் தலைவருக்கான பயண நிகழ்ச்சிகளில் காட்டப்படும் பிரம்மாண்டம் மூலம் தங்கள் செல்வாக்கை எதிர்க் கட்சியினருக்கு மட்டுமின்றி தோழமைக் கட்சியினருக்கும் உணர்த்தினர். நாங்குநேரி பொதுக்கூட்டத்தை அதற்கு எடுத்துக்காட்டாக அக்கட்சி நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதிமுக, திமுக போன்ற கட்சிகள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், மாநாடுகளைப்போல் இந்த பொதுக்கூட்டத்திலும் கட்அவுட்கள், மேடை அலங்காரங்கள், கொடித்தோரணங்கள், வாகனங்களில் சாரை சாரையாக அணிவகுத்த மக்கள் என்று காங்கிரஸ் கட்சி பிரமாணடம் காட்டியிருந்தது.

இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி பேசும்போது, கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி இல்லை. ஆனாலும் பிரம்மாண்டமாக நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என்பதை நிரூபித்திருப்பதாக பெருமைப்பட்டுக்கொண்டார். இந்தக் கூட்டம் எதிரிகளுக்கு மட்டுமின்றி தோழமையினருக்கும் ஆச்சரியமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு ராகுலின் பயணத்தைப் பிரமாண்டப்படுத்துவதன் மூலம் தமிழகத்தில் தங்களுக்குள்ள செல்வாக்கை திமுக கூட்டணிக்கு உணர்த்தி, தொகுதிப் பங்கீட்டில் அதிக இடங்களை பெறும் உள்நோக்கமும் இருந்ததை அக் கட்சியினரே பேசிக்கொள்கிறார்கள்.

சுற்றுப்பயணத்தின்போது பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி பொதுமக்களிடம் ராகுல் காட்டும் அன்பும் பரிவும் காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகத்தை வரவழைத்திருக்கிறது.

இந்தப் பயணத்தின்போது திருநெல்வேலியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த ராகுல்காந்தி தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி, கட்சியின் மேலிட பார்வையாளர் தினேஷ்குண்டுராவ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன், தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

அப்போது திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ள விவகாரத்தை ராகுல்காந்தியிடம் எடுத்து கூறியுள்ளனர்.

கூட்டணியில் அதிக இடங்களை கேட்க வேண்டும் என்று அப்போது ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளார். அதற்கான காரணங்களையும் கட்சியினரிடம் அவர் தெளிவுபடுத்தியதாக தெரிகிறது.

தொகுதி பங்கீட்டில் அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தையின்போது ராகுல்காந்தியின் கருத்துகளை திமுக தலைவர்களிடம் தெரிவித்து அதிக இடங்களைப் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in