

சரத்குமாரை நாங்கள் வரவேற்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் 6-வது பொதுக்குழுக் கூட்டத்தில், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல், ''ஏற்கெனவே சரத்குமார் எங்களைச் சந்தித்துப் பேசினார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலை முதல்வர் வேட்பாளராக ஏற்று, சரத்குமார் எங்கள் கூட்டணிக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம்.
ஆனால் எத்தனை தொகுதிகள் வழங்கப்பட வேண்டும் என்பது இந்தத் தருணத்தில் இதுவரை விவாதிக்கப்படவில்லை. சரத்குமார் அவரின் ஆசையை வெளிப்படுத்தி உள்ளார். கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்துக் குழு அமைத்துள்ளோம். சமக குழுவும் மநீம குழுவும் இணைந்து பேசி, நாளையோ நாளை மறுநாளோ இதுகுறித்து முடிவு செய்வோம்.
26 தொகுதிகள் என்றோ, எந்தெந்தத் தொகுதிகள் என்றோ இதுவரை நாங்கள் பேசவில்லை. கமல்ஹாசனை முதல்வராக்க சேர்ந்து பயணிக்கிறேன் என்று சரத்குமார் கூறியிருந்தார். அதை நாங்கள் வரவேற்கிறோம்'' என்று சி.கே.குமரவேல் தெரிவித்தார்.