Published : 03 Mar 2021 03:25 PM
Last Updated : 03 Mar 2021 03:25 PM

சசிகலாவை அதிமுக கூட்டணியில் இணைக்க நிர்பந்திக்கிறதா பாஜக? - அமைச்சர் ஜெயக்குமார் பதில்

ஜெயக்குமார்: கோப்புப்படம்

சென்னை

அமமுக-சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பில்லை என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்ய இன்றே (மார்ச் 3) கடைசி நாள் என்பதால், அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "ஒரு கட்சி எப்படி எழுச்சியுடன் இருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். எம்ஜிஆர்-ஜெயலலிதா காலத்தில் இருந்த எழுச்சியை இப்போது காணமுடிகிறது. தமிழகத்தில் எம்ஜிஆர்-ஜெயலலிதா அலை வீசுகிறது. இதனால், எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலில் காணாமல் போவார்கள்.

மீண்டும் எம்ஜிஆர்-ஜெயலலிதா அட்சி அமையும். அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். அதற்கு, தொண்டர்கள் உற்சாகத்துடன் விருப்ப மனு அளிப்பதே சான்று. இந்த இயக்கத்திற்கு இணையான சக்தி எதுவும் இல்லை என்ற அளவுக்கு மாபெரும் வரலாறு படைத்த, படைக்கப்போகும் இயக்கம் அதிமுக. எம்ஜிஆர்-ஜெயலலிதா ஆட்சி மலர வேண்டும் என்பதுதான் தமிழக மக்கள், அதிமுகவினரின் எண்ணம்" என்றார்.

பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

சசிகலாவின் பலம் குறித்து ஈபிஎஸ்-ஓபிஎஸ்-க்கு நன்றாக தெரியும், அவரை கூட்டணியில் சேர்ப்பது குறித்து அதிமுக முடிவெடுக்கட்டும் என, பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார். சசிகலாவை கூட்டணியில் சேர்ப்பதற்கு ஏற்கெனவே பாஜக உங்களிடம் பரிந்துரை செய்திருக்கிறதா?

எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது. எங்கள் கட்சி விவகாரத்தில் பாஜக என்றும் தலையிட்டது கிடையாது. எங்களுக்கு நிர்பந்தம் கொடுப்பது போன்று பெரிய வதந்தியை கிளப்பி விடுகிறார்கள். அமமுகவும், சசிகலாவும் அதிமுகவில் இணைவதற்கான எந்த சாத்தியமும் இல்லை. அதற்கு 100% வாய்ப்பே இல்லை. அதுதான் உறுதியான நிலை. தன் தலைமையில் கூட்டணி அமையும் என, டிடிவி தினகரன் கூறுகிறார். எள்ளி நகையாடக்கூடிய அளவுக்குத்தான் அவரது பேச்சு இருக்கிறது. குள்ளநரிகளின் கூட்டமாக இருக்கிறது அமமுக. சிங்கங்கள் கூட்டமாக இருக்கின்றது அதிமுக. இரண்டும் எப்படி இணையும்? அவருடைய பேச்சை ஒரு நகைச்சுவையாகத்தான் மக்கள் எடுத்துக்கொள்வார்கள்.

சசிகலா - அமமுக, அதிமுகவின் கூட்டணிக்கு வருவதை பாஜக விரும்புவது போன்று தெரிகிறதே?

கட்சியை பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. எங்கள் கூட்டணியில் பாஜக ஒரு அங்கம். எங்கள் தலைமையில் அவர்கள் இருக்கின்றனர். ஆனால், எங்கள் கட்சி உள்விவகாரம் அது. அதில் தலையிடாத கொள்கையைத்தான் பாஜக கடைப்பிடிக்கிறது. அவரின் யோசனையாக கூட இதனை சொல்லியிருக்கலாம். அந்த யோசனையைத்தான் நாங்கள் நிராகரித்துவிட்டோமே. எந்த நிலையிலும் அதுகுறித்து பேசுவதற்கு வாய்ப்பில்லை. அந்த ஒரு நிலையும் இல்லை. ஏற்கெனவே எடுத்த முடிவு தான்.

சசிகலாவை இணைப்பது குறித்து ஈபிஎஸ்-ஓபிஎஸ்-சிடம் அமித்ஷா பேசியதாக கூறப்படுகிறதே?

இது வீணான கட்டுக்கதை. அந்த ஆலோசனையில் என்ன பேசினார்கள் என்பது எப்படி தெரியும்? இது தவறான தகவல். அப்படியொரு கருத்தே அங்கு வரவில்லை. கட்சி உள் விவகாரத்தில் தலையிடுவது ஜனநாயக பண்பாக இருக்காது என்பது பாஜகவுக்கும் தெரியும். எங்களுக்கு என கொள்கைகள் இருக்கின்றன. முடிவெடுக்க வேண்டிய அதிகாரம் எங்களுக்குத்தான் இருக்கிறது. அமமுக-சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பில்லை என்பதுதான் எங்கள் முடிவு.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x