Published : 03 Mar 2021 04:35 PM
Last Updated : 03 Mar 2021 04:35 PM

வருட ஆரம்பத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயரத்தான் செய்யும், ஜூன் ஜூலையில் குறையும்: செய்தியாளர்கள் கேள்விக்கு குஷ்புவின் விளக்கம்

சென்னை

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வருட ஆரம்பத்தில் இருக்கத்தான் செய்யும் என செய்தியாளர்கள் கேள்விக்கு குஷ்பு விளக்கம் அளித்தார், செய்தியாளர்கள் தொடர் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் குஷ்பு திணற நயினார் நாகேந்திரன் குறுக்கிட்டு சமாளித்து வேறு கேள்வி கேட்க வேண்டுகோள் வைத்தார்.

பாஜக சார்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் நெல்லையில் நயினார் நாகேந்திரனுடன் இணைந்து பங்கேற்ற குஷ்புவிடம் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு குறித்து கேட்டபோது “ஆமாம் ஒரே மாதத்தில் 125 ரூபாய் உயர்ந்துள்ளது ஒப்புக்கொள்கிறேன்,

ஆனால் ஆண்டுதோறும் வருட இறுதி அல்லது ஆரம்பத்தில் எண்ணெய் விலை கட்டாயம் விலை உயர்வு இருக்கத்தான் செய்யும். உலகம் முழுவதும் கோவிட் பிரச்சினையால் உயர்ந்துள்ளது, நிதியமைச்சர் இது குறித்து விரைவில் குறைக்க முயல்வதாக சொல்லியிருக்கிறார்” என்று சமாளித்தார்.

பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு குறித்து நிதியமைச்சர் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை எண்ணெய் நிறுவனங்கள் தான் தீர்மானிக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டவுடன் நயினார் நாகேந்திரன் குறுக்கிட்டு “நீங்கள் சொல்வது சரிதான் எண்ணெய் நிறுவனங்கள் தான் விலையை தீர்மானிக்கிறது, நிர்ணயிப்பது எண்ணெய் நிறுவனங்கள் தான், பேரல் விலை குறைந்திருந்தாலும் பராமரிப்புச் செலவு மற்ற செலவு காரணமாக விலை ஏறுகிறது” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் இதற்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் இதே எண்ணெய் நிறுவனங்கள் 2 ரூபாய் விலையை உயர்த்திய போது பாஜக சாலையில் இறங்கி போராடினீர்கள், இன்று எண்ணெய் நிறுவனங்கள்தான் காரணம் என்று கைகழுவுகிறீர்களே என்று கேட்டனர்.

கேள்வி கேட்ட செய்தியாளரை நோக்கி குஷ்பு “தம்பி அப்ப காங்கிரஸ் ஏன் ரோட்டுக்கு வரவில்லை போராட்டம் நடத்த, ராகுல் காந்தி ஏன் தண்ணியில் குதிப்பதற்கு ரோட்டில் உட்கார்ந்து போராட்டம் நடத்தியிருக்கலாம் அல்லவா” என சம்பந்தமில்லாமல் பதில் அளிக்க நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சங்கடப்பட்ட நயினார் நாகேந்திரன் குஷ்புவை இடைமறித்து ஒரு நிமிஷம் என பேச்சை நிறுத்த முயன்றார்.

ஆனால் குஷ்பு தொடர்ந்து “ராகுல் தண்ணியில் குதிக்கிறதுக்கு ரோட்டில் குதித்திருக்கலாம், கியாஸ் சிலிண்டர் தலையில் தூக்கி வைத்து போராட்டம் நடத்தியிருக்கலாம், ஏன் அவர் தண்ணியில் குதித்தார்” என கேட்க இடைமறித்த நயினார் நாகேந்திரன் பேச்சு திசை திரும்பி சிக்கலாகிவிடும் என்பதால் இது சம்பந்தமாக நிதி அமைச்சரிடம் பேசியிருக்கிறோம், எங்கள் கட்சியின் சார்பாக விலையை குறைக்கச் சொல்லி கேட்டுள்ளோம் என பதிலளித்து வேற கேள்வி கேளுங்கள் என கோரிக்கை வைத்தார்.

ஆனால் செய்தியாளர்கள் விடாமல் கேஸ் மானியத்தை குறைத்து வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினர் அதற்கும் கோரிக்கை வைத்துள்ளோம் என நயினார் நாகேந்திரன் பதிலளித்து விவாதத்தை முடித்து வைத்தார்.
மக்கள் கொதிப்படைந்துள்ள விவகாரத்தில் அப்படித்தான் விலை ஏறும் என்றும், கேள்வியை உள் வாங்காமலேயே ராகுலை விமர்சித்ததையும் மூத்த அரசியல்வாதி நயினார் நாகேந்திரன் பிரச்சினையை அறிந்து தலையிட்டு சுமுகமாக்கி விட்டதாக செய்தியாளர்கள் இடையே பேச்சாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x