Published : 03 Mar 2021 01:50 PM
Last Updated : 03 Mar 2021 01:50 PM

தொகுதிகளுக்காக திமுகவிடம் இறங்கி போகிறதா காங்கிரஸ்? - கே.எஸ்.அழகிரி பதில்

பந்து திமுகவிடம் தான் இருக்கிறது என தொகுதிப் பங்கீடு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி இன்று (மார்ச் 3) கடலூரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "ஜனநாயகத்தை வேரறுக்கக்கூடிய மோடி அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் தோல்வியைத் தழுவ வேண்டும் என்பதில், காங்கிரஸ் உறுதியான சிந்தனையுடன் உள்ளது.

பாஜகவிடமிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காக மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளையும் காப்பாற்ற வேண்டிய கடமை இருக்கிறது. ஏனென்றால், எல்லா அரசியல் இயக்கங்களிலும் பாஜக உள்ளே நுழைந்து, பல தவறுகளுக்கு அடிப்படையாக அமைகிறார்கள்.

அந்த சர்வாதிகார மனப்போக்கு பாஜகவிடம் இருக்கிறது. எனவே, அதுபோன்ற தவறான சக்திகளை, வேரறுக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவே, அதை நோக்கித்தான் தேர்தல் பேச்சுவார்த்தைகள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், இடப்பங்கீடு எல்லாம் சென்றுகொண்டிருக்கிறது" என்றார்.

இதன்பின், அவர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை எந்தளவில் உள்ளது?

இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை முடியும் நிலையில் உள்ளது.

15 ஆண்டுகளாக திமுகவுடன் ஒன்றாக இருக்கிறீர்கள், பேச்சுவார்த்தை கட்டம்கட்டமாக போய்க்கொண்டிருக்கிறதே?

ஒவ்வொரு அடியாகத்தானே எடுத்து வைக்க முடியும். ஒரேயடியாக 15-20 அடிகளை தாண்டிவிட முடியாது.

எத்தனை இடம் கேட்டுள்ளீர்கள்?

நாங்கள் எத்தனை இடம் கேட்டிருக்கிறோம், அவர்கள் எத்தனை இடம் கொடுப்பார்கள் என்பதெல்லாம் அனுமானமான செய்தி. அவை முக்கியமல்ல. எங்கள் கூட்டணி எப்படி இணைந்து செயல்படுகிறது என்பதுதான் முக்கியம். பந்து அவர்களிடம் (திமுக) இருக்கிறது. திமுக தான் முடிவு செய்ய வேண்டும். பந்தை எப்படி பயன்படுத்துவது என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும்.

நீங்கள் போட்டியிடுவீர்களா?

நான் போட்டியிடவில்லை.

ராகுல் காந்தி வந்திருந்தபோது திமுக கூட்டணி, மு.க.,ஸ்டாலின் குறித்து பேசவில்லையே?

கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக போன்றவையும், எங்களை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என கேட்டனர். தேர்தல் பிரச்சாரம் என்பது எடப்பாடி பழனிசாமியையும் பாஜகவையும் எதிர்த்துப் பேசுவதற்காகத்தான். வருகிற எல்லா கூட்டங்களிலும் பேசிக்கொண்டிருக்க முடியாது.

வரும் கூட்டங்களில் எல்லாம் அதைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்க முடியுமா? தேசிய தலைவர் ராகுல், ஒருமுறை ஸ்டாலின் குறித்து சொல்லியிருக்கிறார். ஸ்டாலினும் ராகுல் குறித்து ஒருமுறை சொல்லியிருக்கிறார். கூட்டம் முழுவதும் அதையே பேசிக்கொண்டிருப்பது நடைமுறை அல்ல.

வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்து...

இது விவாதிக்க வேண்டியது. ஒரு வார்த்தையில் சொல்ல முடியாது. சமூக நீதி என்று சொல்லும்போது, எல்லோருக்கும் உரிய இடம் தர வேண்டும். ஆனால், விவாதித்து, மக்கள் மன்றத்தில் பேசிதான் முடிவெடுக்க முடியும்.

காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா?

நிச்சயமாக.

யாரெல்லாம் போட்டியிடுவார்கள்?

செயற்குழு முடிவு செய்யும்.

தொகுதிகளுக்காக திமுகவிடம் இறங்கி போகிறதா காங்கிரஸ்?

இறங்கி போவது, ஏறிப்போவது என்பதெல்லாம் கிடையாது. தோழமை என்பது நட்பு ரீதியாக இருப்பதுதான். நண்பர்களுக்கு இடையில் பேரம் என்பதே இருக்கக்கூடாது. ஆனாலும், சில விஷயங்களை பேசித்தான் தீர்க்க வேண்டும். பேசாமல் எப்படி இருக்க முடியும்? பேசுவதில் தவறில்லை.

எந்தெந்த தொகுதிகள் கேட்டுள்ளீர்கள்?

இன்னும் நாங்கள் அந்த இடத்துக்கே போகவில்லை. எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பதுதான் பிரச்சினை.

ராகுல் வருகைக்குப் பிறகு காங்கிரசில் எழுச்சி ஏற்பட்டுள்ளதா?

காங்கிரஸ் எழுச்சி எப்போதும் நன்றாக இருக்கிறது. ராகுல் வந்தால்தான் உங்களால் அதனை பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டிலேயே ஒரு பைசா கூட செலவு செய்யாமல் ராகுலுக்கு மட்டும்தான் கூட்டம் கூடுகிறது. பெருமளவு மக்கள் திரள் வந்தார்கள். மக்களுக்கு பணம் கொடுத்து வரவழைக்க காங்கிரசிடம் பணம் இல்லை. காங்கிரசுக்கு வேர் இருப்பதனால், நாட்டுக்கு வளர்ச்சியைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை பதின்பருவ மாணவர்களிடம் இருப்பதால் கூட்டம் கூடுகிறது. ராகுல் காந்தி வளச்ர்ச்சியை கொண்டு வருவார் என அவர்கள் நினைக்கின்றனர்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x