Published : 26 Nov 2015 04:13 PM
Last Updated : 26 Nov 2015 04:13 PM

தாது மணல் கொள்ளை: சிபிஐ விசாரணைக்கு ராமதாஸ் கோரிக்கை

தாது மணல் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய சகாயம் குழு அதன் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற கிரானைட் கொள்ளை குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. இவ்விஷயத்தில், தமிழகத்தின் நலன் காக்கும் முடிவை உயர் நீதிமன்றம் எடுக்கும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

அதே நேரத்தில் கிரானைட் கொள்ளையை விட மிகப்பெரிய இயற்கைவளக் கொள்ளையான தாது மணல் கொள்ளை குறித்த விசாரணை இரண்டரை ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது.

கிரானைட் கொள்ளை வழக்கில் எப்படி முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதோ, அதே போன்ற முன்னேற்றம் தாது மணல் கொள்ளை வழக்கில் ஏற்படவில்லை. இதற்குக் காரணம் தாது மணல் கொள்ளையர்களை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசு துடிப்பது தான்.

கிரானைட் ஊழலையும் மூடி மறைக்கவே தமிழக அரசு முயன்றது. ஆனால், நீதிமன்றம் தலையிட்டு விசாரணைக்கு ஆணையிட்டதால் கிரானைட் கொள்ளை குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட்டிருக்கின்றன. தாது மணல் கொள்ளை குறித்த உண்மைகளும் இதேபோல் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். இவ்விஷயத்தில் உயர் நீதிமன்றம் ஒற்றை ஆணை பிறப்பித்தால் அனைத்து உண்மைகளும் வெளிவரும்.

2013 ஆம் ஆண்டில் கிரானைட் ஊழல் மிகப்பெரிய அளவில் வெடித்த அதே காலகட்டத்தில் தான் தாது மணல் ஊழல் குறித்த ஆதாரங்களும் வெளியாகின.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டதைவிட அதிக அளவில் தாது மணலை அள்ளியிருப்பதை அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஆய்வில் கண்டறிந்தார். இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டதுடன்,இது குறித்து வருவாய்த்துறை செயலர் தலைமையிலான குழு விசாரணை நடத்தவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாதுமணல் குவாரிகளில் ஒரு மாதம் ஆய்வு நடத்திய ககன்தீப்சிங் பேடி குழு அங்கு தாது மணல் கொள்ளை நடந்திருப்பது உண்மை தான் என்று 17.09.2013 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் 71 தாது மணல் குவாரிகளில் ககன்தீப்சிங் குழு ஆய்வு நடத்த அரசு ஆணை பிறப்பித்ததுடன், அந்த குவாரிகளில் தாது மணல் அள்ளவும் தடை விதித்தது. அந்த குவாரிகளிலும் பெருமளவில் தாது மணல் கொள்ளை நடந்திருப்பதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த விசாரணை அறிக்கையை அரசு இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை.

அதுமட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த தாது மணல் கொள்ளை தொடர்பான விசாரணை அறிக்கையையும் தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை. விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 27 மாதங்கள் ஆனபிறகும் அதன் மீது நடவடிக்கையும் எடுக்காமல், அதன் விவரங்களையும் வெளியிடாமல் தமிழக அரசு தவிர்க்கிறது.

2002 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் ரூ.60 லட்சம் கோடி மதிப்புள்ள தோரியம் தாது இந்திய கடலோரப் பகுதிகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அணுசக்தித் துறை தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இப்போது கிரானைட் கொள்ளை குறித்த சகாயம் குழு விசாரணை முடிவடைந்து விட்ட நிலையில், தாது மணல் கொள்ளை குறித்த ககன்தீப்சிங் பேடி குழுவின் விசாரணை அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வைத்து அதனடிப்படையில் கிரானைட் கொள்ளை மட்டுமின்றி, தாதுமணல் கொள்ளை குறித்தும் மத்திய புலனாய்வுப் பிரிவின் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் ஆணையிட வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x