Published : 03 Mar 2021 03:23 AM
Last Updated : 03 Mar 2021 03:23 AM

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கும் ‘மை இந்தியா பார்ட்டி’ - விருப்ப மனு பெறுவதை தலைவர் அனில்குமார் தொடங்கி வைத்தார்

சமீபத்தில் உதயமான ‘மை இந்தியா பார்ட்டி’ தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

மதுரையில் சில நாட்களுக்கு முன்பு ‘மை இந்தியா பார்ட்டி’ தேசிய தலைவர் அனில்குமார் ஓஜா, தேர்தல் திட்ட அறிக்கையை வெளியிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதை சென்னை மண்டலத்தில் தேசியத் தலைவர் அனில்குமார் தொடங்கி வைத்தார். மதுரையில் மாநிலத் தலைவர் நாராயண பிரபு, கோவையில் மேற்கு மண்டலத் தலைவர் சுரேஷ் ஆகியோரிடம் மை இந்தியா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் நேற்று ஆர்வமுடன் விருப்ப மனுக்களை கொடுத்தனர். ஒரே நாளில் மதுரையில் மட்டும் 40 பேரும் தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்டோரும் விருப்ப மனுக்களை கொடுத்துள்ளனர். மார்ச் 7-ம் தேதி வரை மனுக்களை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாநிலத் தலைவர் நாராயண பிரபு தெரிவித்தார்.

கட்சியின் தேசியத் தலைவர் அனில்குமார் ஓஜா கூறியதாவது:

தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், மதுரைஎன 4 மண்டலமாக பிரித்து, விருப்ப மனுக்களை பெறுகிறோம். 10 அல்லது 11-ம் தேதி இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். 234 தொகுதிகளிலும் 12-ம் தேதிமுதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. நேர்மையான, திறமையானவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவோம். யாருடனும்கூட்டணி இல்லை. 50 சதவீதத்துக்கு மேலான பெண்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்.

பொதுக் கூட்டமோ, திறந்தவெளி பிரச்சாரமோ கிடையாது. சென்னையில் 234 தொகுதி வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நடத்தப்படும்.

ஒவ்வொரு தொகுதியிலும் 50 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். தகுதியானவர்களுக்கு 90 நாட்களுக்குள் வேலையை உருவாக்கி தர முடியவில்லையெனில், உதவித்தொகை வழங்குதல் என ஆக்கப்பூர்வ தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி, வரியில்லாத தமிழகத்தை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார். l

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x