Published : 03 Mar 2021 03:23 AM
Last Updated : 03 Mar 2021 03:23 AM

தூத்துக்குடியில் இன்று சமக மாநில பொதுக்குழுக் கூட்டம்: மூன்றாவது அணி குறித்து முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் தூத்துக்குடியில் இன்று (மார்ச் 3) நடைபெறுகிறது. சரத்குமார் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி மூன்றாவது அணிக்கு முயற்சி செய்து வரும்நிலையில், இக்கூட்டம் நடைபெறுவதால் அது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் தூத்துக்குடியில் இன்று(மார்ச் 3) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக தூத்துக்குடி அருகேயுள்ள மறவன்மடம் பகுதியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் தலைமை வகிக்கிறார். மகளிரணிச் செயலாளர் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் 1,800 பேருக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று தூத்துக்குடி வந்த சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவோடு 10 ஆண்டுகள் கூட்டணி வைத்திருந்தோம். இதனால், எந்த தேர்தலையும் முழுமையாக சந்திக்க முடியாமல் போய்விட்டது. எங்களுடைய வாக்கு சதவீதம் என்ன என்பதே தெரியாமல் போய்விட்டது. எனவே, இந்த முறை சீட்டுக்காக யாரிடமும் நிற்கவேண்டாம். தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூறியதன் அடிப்படையில் அதை நோக்கி பயணித்து வருகிறோம்.

நாங்கள் அமைப்பது மூன்றாவது அணி அல்ல, பிரதான அணி. தமிழகத்தில் திராவிட கட்சிகள் அல்லாமல், மாற்று கட்சிகள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த பிரதான அணியை அமைக்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறோம். இப்போதைய நிலையில் விஜயகாந்த் எங்கள் அணிக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு இந்த சட்டப்பேரவை தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். இந்த விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும். ராதிகாஉட்பட கட்சி நிர்வாகிகள் யார்,யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்தும் முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, மூன்றாவது அணியை அமைக்க சரத்குமார் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக சசிகலா, கமல்ஹாசன் உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில் சமகமாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதால், 3-வது அணி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x