

சட்டப்பேரவைத் தேர்தல் விதிமீறல் புகார்கள் தொடர்பாக, காவல் துறை உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கூறினார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தேர்தல் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும், புகார் அளிக்கவும் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 85 புகார்களும், காவல் துறை மூலம் 15 புகார்களும் வந்துள்ளன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார் அளித்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவையில் சுதந்திரமான, வெளிப்படையான முறையில் தேர்தல் நடத்தப்படும். விதிமீறல் புகார்கள் தொடர்பாக பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளேன். காவல் துறை உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பாரபட்சமாக செயல்பட்டதாக புகார் கிடைத்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த துறை அதிகாரியாக இருந்தாலும் பொறுப்புடனும், நேர்மையாகவும் பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனாவால் பாதிக்கப்பட்டதால் வாக்குப்பதிவு மையத்துக்கு வர முடியாதவர்கள் ஆகியோர், தங்கள் வாக்குகளை அஞ்சல் மூலம் செலுத்தலாம். அவர்கள் வரும் 16-ம் தேதிக்குள் படிவம் 12-டியை பூர்த்தி செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது வாக்குச்சாவடி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சக்கர நாற்காலிகள் வைக்கப்படும்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உதவியாக தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கடந்த தேர்தலைக் காட்டிலும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முறையான ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும். மக்களை தேவையின்றி தொந்தரவு செய்யக்கூடாது என்று பறக்கும் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமண மண்டபங்கள், ஹோட்டல்களில் விதிமீறல்கள் நடப்பதாக புகார்கள் வந்தால், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கோவையை ஒட்டியுள்ள, கேரளா மாநிலம் திருச்சூர், பாலக்காடு மாவட்ட அதிகாரிகளுடன், தேர்தல் பணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.