Published : 03 Mar 2021 03:24 AM
Last Updated : 03 Mar 2021 03:24 AM

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மது கடத்தலை கண்காணிக்க அலுவலர் நியமனம்

சேலம் குகை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியை மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் ஆய்வு செய்தார், உடன் சேலம் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர்.

சேலம்

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மது கடத்தல், சட்டவிரோத விற்பனை தொடர்பான புகார்களை விசாரிக்க அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சடடப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 30,04,140 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 61,745 வாக்காளர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், 26,025 மாற்றுத்திறனாளிகள். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4,280 வாக்குச் சாவடிகளில் 20,500-க்கும் மேற்பட்டவர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

வாக்குச் சாவடிகளில் பயன்படுத்த 7,460 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5,479 கட்டுப்பாட்டு கருவிகள், 5,970 விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க மற்றும் ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களுக்கான ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர், அவற்றை ஆய்வு செய்து விடுவிக்கும் குழு என மொத்தம் 92 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் கடத்துதல், விற்பனை செய்தல், மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் அளவுக்கு அதிகமாக விற்பனை செய்தல், சட்ட விரோதமாக வெளி மாநிலங்களில் இருந்து மது கடத்தல் தொடர்பான புகார்களை கண்காணிக்க உதவி மேலாளர் (கணக்கு) டாஸ்மாக் எஸ்.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான தகவல்களை 63741 38737 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வாக்காளர் களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வாக்குச் சாவடிகளில் செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் குகை மூங்கபாடி அரசு மகளிர் பள்ளி வாக்குச்சாவடியில் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ரவிச்சந்திரன் (சேலம் தெற்கு) மாறன் (சேலம் வடக்கு), சத்திய பால கங்காதரன் (சேலம் மேற்கு) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x