

வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் திருமண மண்டபத்தில் தங்க அனுமதிக்கக் கூடாது என கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று திருமண மண்டபம் மற்றும் தனியார் விடுதி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபம் மற்றும் தனியார் விடுதி உரிமையாளர்கள், அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் சார்பில் கூட்டம் நடத்தினால் அந்த தகவலை முன்கூட்டியே மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் பிரிவில் தெரிவிப்பதோடு, பட்டியல் தொகை தகவலையும் அளிக்க வேண்டும்.
வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்பு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நபர்கள் திருமண மண்டபத்தில் தங்க வைக்க அனுமதிக்கக் கூடாது. மேலும், தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
எனவே, நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலை அமைதியான முறையில் நடத்த திருமண மண்டபம், தனியார் விடுதி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.