Published : 03 Mar 2021 03:26 AM
Last Updated : 03 Mar 2021 03:26 AM

அனகாபுத்தூர் தேமுதிக நிர்வாகி கொலை: கஞ்சா விற்பனை புகார் காரணமா?

பல்லாவரம் அருகே அனகாபுத்தூரில் கஞ்சா விற்பவர்கள் பற்றி போலீஸாருக்கு தகவல் கொடுத்ததால் தேமுதிக இளைஞர் அணி துணைத் தலைவர் ராஜ்குமார் கொலை. செய்யப்பட்டார்.

சென்னை பல்லாவரம் அருகே அனகாபுத்தூர் தாய் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (38). இவர் தேமுதிக அனகாபுத்தூர் நகர இளைஞரணி துணைத் தலைவராக இருந்தார். மேலும் அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே தையல் கடை வைத்து நடத்தி வந்தார்.

ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பேருந்து நிலையம் அருகே அவரை வழிமறித்தது. அவர்களிடமிருந்து ராஜ்குமார் தப்பிக்க முயன்றபோது அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியது. இதில் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சங்கர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து ரஞ்சித், சதீஷ் ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கஞ்சா விற்பனை தொடர்பான விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்பகுதியை சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சங்கர் நகர் காவல் நிலைய எல்லையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் யார், எங்கு, எப்படி விற்பனை செய்கிறார்கள் என்ற அனைத்து தகவல்களும் போலீஸாருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர்களை ஒடுக்கும் பணியை செய்வதில் போலீஸார் தயங்குவதேன் என தெரியவில்லை.

சென்னை மாநகர காவல் ஆணையர் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும்.

இளைய சமுதாயம் போதையின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளது. அவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x