

சிவகங்கை, காரைக்குடி பகுதி களில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில் ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.21.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆவணத்தை காண்பித்தும் திருப்பிக் கொடுக்க மறுத்துவிட்டதாகப் பெண் புகார் தெரிவித்தார்.
சிவகங்கை காளவாசல் சோத னைச் சாவடி அருகே மதுரையில் இருந்து நேற்று முன்தினம் இரவு வந்த காரை வட்டாட்சியர் மைலாவதி தலைமையிலான பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
அதில் ரூ.6.5 லட்சம் இருந்தது. விசாரணையில் காரில் வந்தவர்கள் சென்னையைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் என்பதும் அவர்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதும் தெரிய வந்தது. உரிய ஆவணம் இல்லாததால் ரூ.6.5 லட்சத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் தேவகோட்டையில் இருந்து புதுவயலுக்கு வந்த காரை காரைக்குடி அருகே மாத்தூர் பகுதியில் வட்டாட்சியர் சேதுநம்பு தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று சோதனை செய்தனர். அதில் ரூ.10.50 லட்சம் இருந்தது. அரிசியை தேவகோட்டையில் விற்றுவிட்டு பணம் வாங்கி வந்ததாக காரில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். ஆவணம் இல்லாததால் பணத் தைப் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் வள்ளிநாயகி. இவர் காரில் நேற்று காரைக்குடி வந்தார். காரைக்குடி அருகே கண்டனூர் சாலையில் வட்டாட்சியர் நேரு தலை மையிலான தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினர் காரை சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சம் இருந்தது.இதை பறிமுதல் செய்து சிவகங்கை மாவட்டக் கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்ப டைத்தனர்.
இதுகுறித்து வள்ளிநாயகி கூறி யதாவது:
உறவினர் திருமணம் 3 மாதங் களில் நடக்க உள்ளது. தற்போது நகை விலை குறைந்திருப்பதால் காரைக்குடியில் நகை வாங்க ரூ.2 லட்சம் கொண்டு வந்தோம். அதிகாரிகள் சோதனை செய் தபோது வங்கியில் பணம் எடுத்துவந்த ஆவணத்தைக் காட்டினோம். ஆனால், அதை ஏற்காமல் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர் என்றார்.
வட்டாட்சியர் நேரு கூறுகை யில், ‘பறிமுதல் செய்தபோது ஆவணத்தைக் காட்டவில்லை’ என்றார்.
சிவகங்கை அருகே முத்துப் பட்டியில் வட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் வாகனச் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கையில் இருந்து குமாரப்பட்டிக்கு மதிவாணன், மாயழகு ஆகிய இருவரும் காரில் சென்றனர். அவர்களது காரை அதிகாரிகள் சோதனை செய்தபோது ரூ.2.67 லட்சம் ஆவணமின்றி இருந்தது. இதையடுத்து அவற்றை அதி காரிகள் பறிமுதல் செய்தனர்.