

சென்னை அருகே தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை மத்திய குழு நேற்று பார்வையிட்டது.
வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய வந்த மத்திய குழு நேற்று தாம்பரம் சேவா சதன் பள்ளி யில் செயல்பட்டு வரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட் டிருந்த பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
அப்போது பெண் ஒருவர் கூறும் போது, “கனமழையால் எங்கள் வீடுகளில் இருந்த உடைகள் மற்றும் மின் சாதனங்கள் அனைத்தும் நாசமாகிவிட்டன. கடந்த 10 நாட் களாக குழந்தைகளுடன் முகாமில் தங்கியிருக்கிறோம். நாங்கள் இழந்த அனைத்து உடமைகளுக் கும் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று கூறி கதறி அழுதனர்.
மற்றொரு பெண் குழுவினரின் காலில் விழுந்து, “நாங்கள் குடியிருக்கும் பகுதியை நீர்ப்பிடிப்பு பகுதி என்று கூறி தாம்பரம் நகராட்சி அகற்றி வருகிறது. அதைத் தடுக்க உத்தரவிட வேண்டும். எங்கள் வாழ்வாதாரம் பறிபோகிறது” என்று அழுதார்.
அதனைத் தொடர்ந்து ஆதனூர், பெருங்களத்தூர், பீர்க்கன் கரணை, முடிச்சூர், வரதராஜபுரம் ஆகிய பகுதியில் தேங்கிய மழைநீர், சாலையை வெட்டி பாப்பான் கால்வாய் வழியாக வெளி யேற்றப்படுவதை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்.கஜலட்சுமி, ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா ஆகியோர் மத்திய குழுவினருக்கு வரைபடங்களுடன் விளக்கினர்.
அதனைத் தொடர்ந்து தாம்பரம் சிடிஓ காலனி பகுதியில் பல்வேறு பகுதிகளில் சாலைகளை வெட்டி மழைநீர் வடிய மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் விளக்கினர்.
திருமுடிவாக்கம் பகுதியில் அமைந்துள்ள பூந்தமல்லி வெளி வட்டச் சாலை மேம்பாலத்தில் இருந்து அப்பகுதி மழைநீரால் சூழ்ந்திருப்பதையும், தொடர்ந்து மழை நீர் வழிந்தோடுவதையும் மத்திய குழுவினர் பார்வை யிட்டனர். அப்போது இது என்ன நீர்ப்பிடிப்பு பகுதியா? என தமிழக அதிகாரிகளிடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஆட்சியர் ஆர்.கஜலட்சுமி, “அதிகப்படியான மழை காரணமாக முடிச்சூர், எருமையூர், பெருங்களத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வெளி யேறி மழைநீர் சூழ்ந்துள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து சென்னை மாநக ராட்சிக்கு உட்பட்ட வேளச்சேரியில் வேளச்சேரி மேம்பாலம், அண்ணா பூங்கா ஆகிய பகுதிகளை பார்வை யிட்டு வெள்ளச் சேதங்களையும் மதிப்பீடு செய்தனர். பின்னர் சைதாப்பேட்டையில் உள்ள மறைமலை அடிகள் பாலத்தில் இருந்தவாறு, அடையாற்றில் ஓடும் வெள்ளம் மற்றும் ஆற்றின் கரையோரங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் ஆகிய வற்றை பார்வையிட்டனர்.
பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழு, வெள்ள பாதிப்புகள் தொடர்பான வீடியோ காட்சிகளை வழங்குங்கள்; அதை பார்த்தால் வெள்ள பாதிப்பின் உண்மை நிலை தெரியவரும் என்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திடம் கூறினர்.
ஒரு வாரத்தில் அறிக்கை
முன்னதாக குழுவின் தலைவர் டி.வி.எஸ்.என்.பிரசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் வெள்ளச் சேத ஆய்வுப் பணிகள் முடிந்து டெல்லி சென்ற பிறகு, ஒரு வார காலத்துக்குள் மதிப்பீட்டு அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம். அதன் அடிப்படையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
மத்தியக் குழுவினர் இன்று கட லூர் மாவட்ட வெள்ளச் சேதங்களை பார்வையிட உள்ளனர்.