

சங்கரன்கோவில் அருகே 2 கிராமங் களைச் சேர்ந்த மக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள பாட்டத்தூர் கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதி சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்டதாகும். இங்கு, கழிவு நீரோடை, மயான எரிகூடம், ஊர் கிணற்றில் இரும்பு வலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பதாக இந்த கிராமத்தில் பதாகைகள் வைத்துள்ளனர்.
இதேபோல சங்கரன்கோவில் அருகே உள்ள இருமன்குளம் கிராமத்தில் சுமார் 800 குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் நேற்று அப்பகுதியில் திரண்டனர். அவர்கள், தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த இட ஒதுக்கீட்டைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “தமிழக அரசு ஒரு சமுதாயத்துக்கு மட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது கண்டிக்கத்தக்கது. சீர்மரபினர் உட்பட 93 சமுதாயத்துக்கு வெறும் 7 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட 22 சமுதாயத்துக்கு 2.5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பு சமூக நீதியை குழி தோண்டி புதைப்பதாக உள்ளது. இந்த இட ஒதுக்கீட்டை கண்டித்து இருமன்குளம் மக்கள் ஒட்டு மொத்தமாக தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்றனர்.