

‘‘தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை காங்கிரஸ் ஒதுக்க வேண்டும்,’’ என சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் கட்சித் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜக சாயல் அல்லாத ஆட்சி தமிழகத்தில் வரவேண்டும் என்பதற்காக ஆட்சிமாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர்.
காங்கிரஸில் சில நடைமுறை மாற்றங்கள் வரவேண்டும் எனவும் விரும்புகின்றனர் . உட்கட்சித் தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்துக்கு உடன்படுகிறேன்.
மந்தமான பொருளாதாரத்தால் பணப்புழக்கம் இல்லை. அதனால் பறக்கும் படையால் பணம் பிடிக்க முடியவில்லை. குழப்பமான ஜிஎஸ்டியால் அரசுக்கு வருமானம் இல்லை. மேலும் நாடாளுமன்றம் கட்ட பணம் தேவைப்படுகிறது. அதற்காக பெட்ரோல், டீசல், கேஸ் மூலம் மக்கள் மீது வரிச்சுமையை சுமத்துகின்றனர்.
தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட மகளிர், இளைஞர்கள், சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சிறுபான்மையினரை பாதுகாக்கும் கட்சி காங்கிரஸ் என்றால், தேர்தலில் சிறுபான்மையினரும் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
அதேபோல் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும். கடந்த மக்களவைத் தேர்தலில் வென்ற 9 பேரில் ஒருவர் மட்டுமே பெண்.
இதுகுறித்து மேலிடத்தில் பேசவிருக்கிறேன். மேலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களின் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான முடிவு கிடைக்கும்.
பாஜகவுக்கு செல்வாக்கு இருந்தால் மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதை விடுத்து எம்எல்ஏக்களை ராஜினமா செய்ய வைத்து ஆட்சியைக் கலைப்பது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல. பெருளாதார வீழ்ச்சி, சிறுபான்மையினருக்கு ஏற்பட்டுள்ள அச்சம், தமிழ் உணர்வுகளை மதிக்காத பாஜகவிடம் ஒத்துபோகும் அதிமுக அரசு, பத்தாண்டு காலமாக தொழில் வளர்ச்சி இல்லாதது, அனைத்துத் துறைகளிலும் ஊழல் போன்றவற்றை மக்களிடம் எடுத்துக் கூறி திமுக கூட்டணி வெற்றிபெறும்.
மேலும் தமிழகத் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிக்கு தான் நேரடி போட்டி. வேலைக்கு வரும் பெண்களிடம் ஆண்கள் பாலியல் தொல்லை கொடுக்கின்றனர். இது எல்லா இடங்களில் நடக்கிறது. ஆண்கள் பெண்களுக்கு மதிப்பளித்து சமமாக நடத்த வேண்டும், என்று கூறினார்.