

நிலக்கோட்டை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் ஜான்பாண்டியன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை(தனி) தொகுதியில் தற்போது அதிமுக எம்எல்ஏ.,வாக தேன்மொழி உள்ளார். இந்தமுறையும் இவர் போட்டியிட வாய்ப்பு கேட்டுவருகிறார். இவருடன் இருபதுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சித்தலைமையில் விருப்பமனு கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக முன்னேற்றகழக கட்சித்தலைவர் ஜான்பாண்டியன் அதிமுக கூட்டணியில் நிலக்கோட்டை தொகுதியைக் கேட்டுப்பெற முயற்சித்துவருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் போட்டியிட ஆயத்தமாக கடந்த மாதம் நிலக்கோட்டையில் தனது கட்சியின் கூட்டத்தையும் நடத்தினார்.
இந்நிலையில் தற்போது சமூகவலைதளங்களில் ‘நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் ஜான்பாண்டியனுக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களியுங்கள்’ என்ற வாசகங்களுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி, இரட்டை இலை சின்னம் படங்களுடன் ஜான்பாண்டியன் படமும் இடம்பெற்ற போஸ்டர் வடிவ படங்கள் உலாவருகின்றன.
அதிமுக கூட்டணியில் கூட்டணிப் பேச்சுவாரத்தை முடிவடையாத நிலையில் ஜான்பாண்டியன், இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிடுவது போன்று வாட்ஸ் ஆப், பேஸ்புக் களில் பரப்பப்பட்டுவருவதால் நிலக்கோட்டை தொகுதி அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுகவினர் சிலர் கூறுகையில், "நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக தொடர்ந்து வெற்றிபெற்றுவந்துள்ளது. இதனால் இந்தத் தொகுதியை அதிமுக தலைமை விட்டுக்கொடுக்காது. தங்கள் பக்கம் கவனத்தை ஈர்க்கும்வகையில் இதுபோன்றவற்றை வலைதளங்களில் பரப்பிவருகின்றனர்.
அதில் முதல்வர், துணைமுதல்வர் படங்கள் இல்லை. இரட்டை இலை சின்னம், முன்னாள் முதல்வர், பிரதமர் படங்களை மட்டும் பயன்படுத்தியுள்ளனர்.
தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே தான்தான் வேட்பாளர் என்றும், அதிமுக சின்னத்தையும் பயன்படுத்தியுள்ளது அதிமுகவினரை வருத்தமடையச்செய்துள்ளது. இந்தமுறையும் நிலக்கோட்டை தொகுதியில் அதிமுகவே போட்டியிடும். தொகுதியை விட்டுக்கொடுக்க விடமாட்டோம்" என்றனர்.