Published : 02 Mar 2021 07:00 PM
Last Updated : 02 Mar 2021 07:00 PM

திமுக- காங்கிரஸ் பேச்சுவார்த்தை வெற்றி; இரு நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்- கே.எஸ்.அழகிரி பேட்டி

தொகுதிப் பங்கீடு குறித்த திமுக- காங்கிரஸ் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைத்துள்ளதாகவும் இரு நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தமிழகக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க திமுக, அதிமுக கட்சிகள் தலைமையில் தனித்தனியாகக் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. பெரும்பாலான கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக தரப்பில் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் மட்டும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் இன்று இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்எல்ஏ ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ''காமராசர் ஆட்சியை அமைப்போம் என்றுதான் கூறியிருந்தேன். 2021-ல் காமராசர் ஆட்சியமைப்போம் எனக் கூறவில்லை. இதற்கான நடைமுறைகள், திட்டமிடல், செயல்முறைகள் வேண்டும். அதற்காக நாங்கள் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம்.

காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை அச்சாகிக் கொண்டிருக்கிறது. விரைவில் இந்த வாரத்திலேயே தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

திமுக- காங்கிரஸ் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக, சிறப்பாக, இணக்கமாக, சுமுகமாக நடந்தது. எங்களுடைய கருத்துகளைச் சொல்லி இருக்கிறோம். திமுகவில் எல்லோருமே எங்களுடன் சமமாக, நட்பாகப் பழகுகின்றனர்.

பேச்சுவார்த்தையில் எவ்விதத் தாமதமும் இல்லை. இன்னும் எதிர்க்கட்சிகள் தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. விரைவில் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து முடிவு செய்யப்படும். மீண்டும் 3-ம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று அதில் தொகுதி பங்கீடு செய்யப்படும். எத்தனை தொகுதிகள் கேட்டிருக்கிறோம் என்று உங்களிடம் (செய்தியாளர்களிடம்) சொல்ல முடியாது.இரு நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று நம்புகிறோம்.

நாடாளுமன்றத் தேர்தலில் 10-க்கு 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். ராகுல் காந்தி ஏற்கெனவே திமுகவுடன் கூட்டணி குறித்துப் பேசியிருக்கிறார். இருவரும் ஒன்றாக ஏறும் மேடைகளில் இதுகுறித்து ராகுல் பேசுவார். நாங்கள் எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று மட்டுமே முடிவு செய்வோம். திமுகவினர் போட்டியிடும் இடங்கள் குறித்தெல்லாம் நாங்கள் முடிவு செய்ய முடியாது'' என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x