Last Updated : 02 Mar, 2021 06:26 PM

 

Published : 02 Mar 2021 06:26 PM
Last Updated : 02 Mar 2021 06:26 PM

அதிமுக அரசு மீது ஆதாரபூர்வமாக ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை: பாஜக பேரணியில் பங்கேற்ற குஷ்பு கருத்து

அதிமுக அரசு மீது ஆதாரபூர்வமாக ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்று பாஜக நட்சத்திரப் பேச்சாளரான நடிகை குஷ்பு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது. அந்த நம்பிக்கையுடன் தேர்தலில் இறங்கியிருக்கிறோம். நம்பிக்கைதான் வாழ்க்கை. அந்த நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களைக் கொடுத்துள்ளார். நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் குற்றஞ்சாட்ட எதுவுமே இல்லை. பாஜக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகளே இல்லை. அதுபோல் தமிழகத்தில் பழனிசாமி மீது எவ்வித ஆதாரபூர்வ ஊழல் குற்றச்சாட்டும் இல்லை.

நிதியாண்டு தொடக்கத்தில் எரிபொருள் விலை உயர்வு இருக்கவே செய்யும். 1 கோடி பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு கொடுக்கப்படவுள்ளது. பாஜக சீட் கொடுக்கும் இடத்திலோ, வாங்கும் இடத்திலோ இல்லை. அதிமுக கூட்டணியில் பாஜக மரியாதையோடு இருக்கிறது. திருநெல்வேலி தொகுதியில் யார் போட்டி என்பது குறித்து மேலிடத்தில் முடிவு செய்யும். நயினார்நாகேந்திரன் போட்டியிட்டால் எங்களுக்கு சந்தோஷம். அவர் நிச்சயம் வெற்றி பெறுவார்.

தமிழகத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான விவகாரத்தில் அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

ராகுல்காந்தி 2 கட்டமாக சுற்றுப்பயணத்தில் மீனவர்கள், மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த குஷ்பு, ஒரு தலைவர் தாங்கள் செய்வதை மக்களுக்கு சொல்லணும், மீனவர்களுடன் தண்ணீரில் குதித்து நீச்சல் அடிக்கிறதோ, மாணவர்களுடன் சேர்ந்து குஸ்தி அடிக்கிறதோ ஒரு தலைவருக்கு நல்லதல்ல.

திமுக கூட்டணி வெற்றி பெற்றால் இப்படி 10-ம் வகுப்பு மாணவர்களுடன் குஸ்தி பண்ணுவீங்களா. நீங்கள் என்ன நல்ல திட்டங்களை கொண்டுவருவீர்கள் என்பதை சொல்ல வேண்டும் என்று பதில் அளித்தார்.

பேரணியில் பாஜக மாநில துணை தலைவர் நயினார்நாகேந்திரன், மாவட்ட தலைவர் மகாராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x