திருச்சியில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: பிப்ரவரியில் மட்டும் 42 பேருக்கு பாதிப்பு

திருச்சியில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: பிப்ரவரியில் மட்டும் 42 பேருக்கு பாதிப்பு
Updated on
2 min read

திருச்சி மாநகரில் கரோனா பரவல் குறைந்து, மக்களிடையே அச்சம் தணிந்து வரும் நிலையில், தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறித்த அச்சம் கடந்த ஆண்டு மார்ச்சில் ஏற்பட்டது. இந்த ஓராண்டில் சுமார் 15,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அரசின் பல்வேறு நடவடிக்கைகள், மக்களிடத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வு ஆகியவை காரணமாகக் கரோனா பரவல் குறைந்துள்ளது. திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நேற்றைய நிலவரப்படி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேர் கரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரோனா பல்வேறு உயிர்களைப் பலி வாங்கிய நிலையில், தற்போது திருச்சி மாநகரில் டெங்கு காய்ச்சல் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் கடந்த ஜனவரி மாதம் 18 பேருக்கும், பிப்ரவரி மாதம் 42 பேருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவி வருவது தெரியாமலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமலும் மாநகராட்சி சுகாதாரத் துறையும், நிர்வாகமும் அலட்சியமாக இருந்ததாலேயே கடந்த மாதம் அதிகபட்சமாக 42 பேருக்கு டெங்கு பாதிப்பு நேரிட்டதாகவும், ஒரே பகுதியில் 12 பேருக்கு டெங்கு பாதிப்பு நேரிட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அவர்களில் சிலர் கூறும்போது, ''கரோனா பரவல் காரணமாக மாநகராட்சி பூங்காக்கள் பல மாதங்களாக மூடிக் கிடந்தன. செயற்கை நீரூற்று உள்ள பூங்காக்களில் அந்தக் கட்டமைப்புகளில் தேங்கிய தண்ணீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றவில்லை. இதனிடையே, திருச்சியில் நல்ல மழையும் பெய்தது. இதனால், பூங்காக்களில் உள்ள செயற்கை நீரூற்றுக் கட்டமைப்புகள் மற்றும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகிவிட்டன.

கரோனா கட்டுப்பாடுகள் தளர்வு நடவடிக்கையாக பூங்காக்கள் மீண்டும் திறக்கப்பட்டவுடன், பூங்காவுக்குச் சென்ற பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு நேரிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி தெருக்கள், வீடுகள் ஆகியவற்றில் உள்ள கீழ்நிலைத் தொட்டிகளில் தேங்கிய தண்ணீரிலும் டெங்கு கொசு உற்பத்தியாகியுள்ளது. இதன்படி, திருச்சியில் 50-வது வார்டு இனாம்தார் தோப்பு பகுதியில் மட்டும் பிப்ரவரி மாதத்தில் 12 பேருக்கு டெங்கு பாதிப்பு நேரிட்டது. இதேபோல், குத்பிஷா தெரு, கூனி பஜார் ஆகிய பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நேரிட்டுள்ளது.

இந்த பாதிப்பு நேரிட்டதற்கு மாநகராட்சி சுகாதாரத் துறையும், நிர்வாகமும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததே காரணம். அதாவது, குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள் உட்பட அனைத்து இடங்களிலும் டெங்கு கொசு உற்பத்திக்கு ஏதுவான ஆதாரங்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்து, அப்புறப்படுத்தி, அபேட் மருந்து- புகை மருந்து தெளிக்கும் பணியை முறையாக நடத்தாததே காரணம்.

இனியாவது மக்களின் நலன்களை மனதில் நிறுத்தி டெங்கு கொசு ஒழிப்புப் பணியை மாநகராட்சி சுகாதாரத் துறையும், நிர்வாகமும் முறையாக மேற்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in