Last Updated : 02 Mar, 2021 05:54 PM

 

Published : 02 Mar 2021 05:54 PM
Last Updated : 02 Mar 2021 05:54 PM

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நெல்லையில் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு

திருநெல்வேலி

திருநெல்வேலி அருகே சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு இன்று நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை மற்றும் துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு தாழையுத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மேலதாழையூத்திலிருந்து தொடங்கி தென்கலம் விளக்கு, சங்கர் நகர் பாலம், 9-வது பஸ் ஸ்டாப், ராஜவல்லி புரம் ரயில்வே கேட் மற்றும் நகரின் முக்கிய பகுதி வழியாக வந்து தாழையூத்து பேருந்து நிறுத்தத்தில் நிறைவு பெற்றது.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் தலைமை வகித்தார்.

இதுபோல் மானூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி மானூர் பஜார் மற்றும் முக்கிய பகுதிகள் வழியாக கொடி அணிவகுப்பு மானூர் பேருந்து நிறுத்தத்தில் நிறைவு பெற்றது.

இந்த அணிவகுப்பில் டிஎஸ்பி அர்ச்சனா, எல்லை பாதுகாப்புப் படை துணை தளபதி நரேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பத்மநாப பிள்ளை, ராமர், காவல் நிலைய‌ உதவி ஆய்வாளர்கள், மற்றும் அஸ்ஸாம் மாநில எல்லை பாதுகாப்புப் படையினர் 64 பேர், மற்றும் 40 உள்ளூர் போலீஸார் உட்பட 104 பேர் கலந்து கொண்டனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறும்போது, தேர்தலை முன்னிட்டு காவல்துறை மற்றும் துணை ராணுவ படையினரின் கொடி அணிவகுப்பு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பதற்றமான வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் நடத்தப்படும். பொதுமக்கள் அச்சமின்றி அவர்களது ஜனநாயக கடமையாற்றுவதற்கும், அமைதியாக தேர்தலை நடத்துவதற்கும் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

வாக்காளர்கள் பணம் அல்லது பொருட்களை வாங்கிகொண்டு வாக்களிக்க வேண்டாம். நேர்மையான முறையில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திருநெல்வேலியில் மாநகர காவல்துறை துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாநகரில் பல்வேறு இடங்களில் வாகன சோதனையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் வண்ணார்பேட்டையில் துணை ஆணையர் சீனிவாசன், உதவி ஆணையர் ராஜு, இன்ஸ்பெக்டர்கள் ஆடிவேல், மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் நகலாந்து எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இது குறித்து துணை ஆணையர் கூறும்போது, மாநகர பகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி பணப்பரிமாற்றம் நடைபெறுகிறதா என்பது கண்காணிக்கப்படுகிறது. மாநகரில் 7 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 25 ரோந்து மோட்டார் சைக்கிள்கள் காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

தேர்தல் விதிமீறல்கள், பிரச்சினைகள் குறித்து தகவல் வந்ததும் சம்பவ இடங்களுக்கு இந்த மோட்டார் சைக்கிள்களில் போலீஸார் விரைந்து செல்வார்கள். பிரச்சினைக்குரிய பகுதிகளில் எல்லை பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

இதனிடையே மாநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நேற்று மாலையில் நடத்தப்பட்டது. பாளையங்கோட்டையில் லூர்துநாதன் சிலை முன்பிருந்து தொடங்கிய ஊர்வலம் கோபாலசுவாமி கோயில், மார்க்கெட், சமாதானபுரம், பெல் பள்ளி வரையில் நடைபெற்றது. மாநகர போலீஸாருடன் எல்லை பாதுகாப்புப் படையினரும் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x