Last Updated : 02 Mar, 2021 05:33 PM

 

Published : 02 Mar 2021 05:33 PM
Last Updated : 02 Mar 2021 05:33 PM

புதுச்சேரி திரும்பினார் ரங்கசாமி; கூட்டணியிலிருந்து விலகுகிறாரா? முடிவுக்காகக் காத்திருக்கும் பாஜக

ஆன்மிகப் பயணம் முடித்துக்கொண்டு புதுச்சேரிக்குத் திரும்பிய என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை, பாஜக மாநிலத் தலைவர் சந்தித்து கட்சி மேலிடம் தெரிவித்த தகவலைத் தெரிவித்தார். இதையடுத்து, தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரங்கசாமி, தனது முடிவை விரைவில் தெரிவிக்க உள்ளார். அவரது முடிவுக்காக பாஜக கூட்டணி காத்திருக்கிறது.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் மே மாதம் நடக்கும் என அரசியல் கட்சிகள் கருதியிருந்தன. ஆனால், திடீரென அடுத்த மாதம் தேர்தல் அறிவித்திருப்பது, அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக ஒரு மாதமே உள்ள நிலையில், இந்த வாரத்திலேயே கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை முடித்து பிரச்சாரத்துக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நாள்தோறும் சென்னையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைமைகள் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

புதுவையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸுடனும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை பாஜக முன்னிலைப்படுத்துவதால் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என ரங்கசாமி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், பெரும்பான்மை கிடைக்கும் வகையில் கணிசமான தொகுதிகள் வேண்டும் எனவும் ரங்கசாமி கேட்டு வந்தார். இதனால் கூட்டணியில் இழுபறி நீடித்து வந்தது. திங்களன்று ஆன்மிகச் சுற்றுப் பயணமாக பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூர், சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு சென்ற ரங்கசாமி, திட்டமிட்டபடி திருச்செந்தூர் செல்லாமல் இன்று (மார்ச் 02) புதுவைக்குத் திரும்பினார். இந்நிலையில், இன்று திலாசுப்பேட்டையில் உள்ள ரங்கசாமியின் வீட்டில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடம் நடைபெற்றது.

இதுபற்றி, இரு கட்சி வட்டாரங்களிலும் விசாரித்தபோது, "பாஜக மேலிடம் அளித்த வாக்குறுதிகளை ரங்கசாமியிடம் சாமிநாதன் தெரிவித்துள்ளார். முதல்வர் வேட்பாளராக ரங்கசாமியை முன்னிறுத்த பாஜக தலைமை ஒப்புதல் தந்துள்ளதாகவும், கூடுதலான தொகுதிகளை பாஜகவுக்கு தரவும் கட்சித் தலைமை விரும்புவதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளோடு ஆலோசித்து முடிவு தெரிவிப்பதாக ரங்கசாமி தெரிவித்துள்ளார்" என்று தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, அவர் கூட்டணியில் தொடரப் போவதில்லை என்ற தகவலும் பரவியது.

இதுபற்றி, என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, "கட்சி தொடங்கி குறுகிய காலத்திலேயே ஆட்சியைப் பிடித்தவர் ரங்கசாமி. அப்பா பைத்தியம் சாமியின் தீவிர பக்தர். அவர் மனதில் முடிவு எடுத்தாலும் வெளியே சொல்ல மாட்டார். சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் அமர்ந்து தியானித்தே முடிவு எடுப்பார்.

தேர்தல் கூட்டணி தொடர்பாக தற்போதைய ஆன்மிகப் பயணத்தில் சேலம் கோயிலில் அமர்ந்து முக்கிய முடிவு எடுத்துள்ளார். ஆனால், இதுவரை அதுபற்றி வெளியே சொல்லவில்லை. இதன்பிறகு, வேட்பாளர் தேர்வும், ஜாதகம், ராசி அடிப்படையில்தான் முடிவு எடுப்பார். கட்சியில் அவர்தான் முடிவு எடுப்பார். அது அவரைத் தவிர யாருக்கும் தெரியாது. ஒருவேளை இன்றோ, நாளையோ அவராக முடிவை தெரிவித்தால்தான் எதுவும் சொல்ல முடியும்" என்றனர்.

இதனால் ரங்கசாமியின் முடிவுக்காக பாஜக கூட்டணி காத்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x