Published : 02 Mar 2021 05:23 PM
Last Updated : 02 Mar 2021 05:23 PM

அதிமுக-பாஜக இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையிலும் இழுபறி

அதிமுக, பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதிலும் உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடிக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே எண்ணிக்கையை விடத் தொகுதிகளே பிரச்சினையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க திமுக, அதிமுக தலைமையில் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. திமுக கூட்டணிக் கட்சிகளுக்குக் கிள்ளிக் கொடுக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடும் நிலையில், அதிமுகவும் கிட்டத்தட்ட அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

அதிமுக கூட்டணியில் தம் கட்சிக்கு அதிக இடங்கள் வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடாக உள்ளது. அதேசமயம் அதிமுக 170 இடங்களுக்கு மேல் நின்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கூட்டணிக் கட்சிகளையும் விட்டுவிட மனமில்லை. இந்நிலையில் பாமகவின் கோரிக்கையான வன்னியர் உள் ஒதுக்கீட்டை நிறைவேற்றி பாமகவை 23 தொகுதிகளுக்குள் நிறுத்திய அதிமுக தலைமை, பாஜகவை 20 தொகுதிகளில் நிறுத்தத் திட்டமிட்டு இயங்கியது.

ஆனால், பாஜகவின் தேசிய தலைமை நெருக்குதல் காரணமாக அந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே நேற்று முன்தினம் தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் மற்றும் புதுவைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் சந்தித்தனர். உடன் பாஜகவின் அமைப்பு தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷும் இருந்தனர்.

அந்தப் பேச்சுவார்த்தையில் பாஜக கேட்கும் கூடுதலான தொகுதிகளை அளிக்க முடியாத நிலையை இருவரும் விளக்க, எண்ணிக்கை என்பதைவிட பாஜக வெல்லும் தொகுதியாக கணித்து வைத்துள்ள தொகுதிகளை மாநில நிர்வாகிகள் கேட்டால் அதைக் கொடுங்கள் என அமித் ஷா சொன்னதாகத் தகவல் வெளியானது. அதில் பாஜக 30 தொகுதிகளுக்கு மேல் கேட்பதாகவும் அதிமுக 20லிருந்து 22 தொகுதிகள் வரை தரத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மீண்டும் பாஜக - அதிமுக இடையே இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்டோரும், பாஜக தரப்பில் தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோரும் எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் பேசினர்.

பாஜக தரப்பில் 25 தொகுதிகளுக்குக் குறையாமல் பிடிவாதமாக உள்ளதாகவும், அதிமுக தரப்பில் 23 தொகுதிகள் வரை தரத் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படாமல் இழுபடி நீடிக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே எண்ணிக்கையை விடத் தொகுதிகளே பிரச்சினையாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாஜக கேட்கும் தொகுதிகளின் அடிப்படையில் எண்ணிக்கை கூடுதலாகவோ, குறைவாகவோ நிர்ணயிக்கப்படும். பாஜக, அதிமுகவின் முக்கியப் பிரமுகர்கள் நிற்கும் தொகுதியைக் கேட்பதால் அதிமுகவுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x