Published : 02 Mar 2021 05:12 PM
Last Updated : 02 Mar 2021 05:12 PM

வன்னியர் உள் ஒதுக்கீடு மசோதாவுக்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு: விரைவில் விசாரணை

வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட தற்காலிக சட்ட மசோதாவின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கத் தடை கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில், தற்காலிக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதனை எதிர்த்து, தென்நாடு மக்கள் கட்சி நிறுவனர் கணேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர், வன்னிய கவுண்டர், வன்னிய குல ஷத்திரியர் என ஏழு பிரிவினருக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கி சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

சாதிவாரி மக்கள் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கி உள்ளதால், ஆறு மாதங்களுக்குத் தற்காலிகமாக இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக அந்தச் சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளதாகவும், சாதிவாரி கணக்கெடுப்பை முடிக்காமல் எப்படி இயற்றப்பட்டது எனவும் மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், 68 சாதிகளைக் கொண்ட சீர்மரபினர் பிரிவினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கி வரும் நிலையில், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள 22 சாதிகளுக்கு வெறும் 2.5% இட ஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையிலேயே வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எண்ணம் இருந்திருந்தால் அதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும் என்றும், தேர்தல் நெருங்கும் நிலையில் நிலையில் அரசியல் லாபத்திற்காக இந்தச் சட்ட மசோதா இயற்றப்பட்டு உள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x