Published : 02 Mar 2021 03:36 PM
Last Updated : 02 Mar 2021 03:36 PM

காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையா?- டிடிவி தினகரன் பதில் 

சென்னை

அமமுகவுடன் கூட்டணிக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்று தெரிவித்த டிடிவி தினகரனிடம், காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்று கேட்டபோது மழுப்பலாக பதில் அளித்தார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் சுணக்கம் நிலவி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ், திமுக கூட்டணியை விட்டு வெளியேறி மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைக்கலாம், அமமுகவுடன் இணையலாம் என்றெல்லாம் பேச்சு அடிபடும் நிலையில் டிடிவி தினகரன் அதுகுறித்து பதிலளித்துள்ளார்.

செய்தியாளர்கள் கேள்விக்கு டிடிவி தினகரன் அளித்த பதில்:

அமமுக - அதிமுக இணைப்பு பற்றி?

அது எல்லாம் ஊகமாக உள்ளது. செய்தியாக வருகிறது. காரணம் எனக்குத் தெரியவில்லை.

அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா?

பொதுக்குழு முடிந்தவுடன் நான் சொன்னேன், அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து அனைத்துக் கட்சிகளையும் அதில் கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறோம் என்று. அதைத்தான் சொல்கிறேன். சில முக்கியக் கட்சிகளுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறேன். இறுதி முடிவு வந்தவுடன் நிச்சயம் உங்களிடம் தெரிவிப்பேன்.

அதில் காங்கிரஸும் உண்டா?

நிறையக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறேன். அதை வெளியில் சொல்வது நன்றாக இருக்காது என்று நினைக்கிறேன். கூட்டணி முடிந்தவுடன் அறிவிக்கிறேன். நாங்கள் கட்சி அலுவலகத்தில் சென்றுதான் பேச வேண்டும் என்றில்லை.

பாஜக, அதிமுக உங்களை வெளிப்படையாக அழைத்துப் பேச வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளதா?

எதற்கு இன்னொரு கட்சி எங்களை வெளிப்படையாக அழைத்துப் பேசவேண்டும். அமமுக தலைமையில் கூட்டணிக்காக நாங்கள் பல கட்சிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். அதில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

அதிமுக, பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என்று சொல்ல முடியுமா?

இது தேர்தல் நடக்கும் நேரம். எங்களுடைய ஒரே இலக்கு திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான். அதற்காகத்தான் நான் முயற்சிகளைச் செய்துகொண்டு வருகிறேன். இந்தக் கட்சி கூடாது, அந்தக் கட்சி கூடாது என்பதை விட திமுகவை எதிர்க்கின்ற அத்தனை கட்சிகளும் அமமுக தலைமையை ஏற்று வந்தால் இணைந்து செயல்படத் தயார்.

திமுகவைத் தோற்கடிக்க அதிமுக, பாஜகவுடன் சேரத் தயார் என்று எடுத்துக்கொள்ளலாமா?

அப்படி இல்லை. எங்கள் தலைமையை ஏற்று எந்தக் கட்சி வந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார். நீங்கள் சில கட்சிகளைக் குறிப்பிட்டுச் சேர்க்கிறீர்கள். அதற்கு நான் பதிலளிக்க முடியாது. உங்கள் ஆசைக்காகச் சொல்கிறேன். யார் வந்தாலும் பேசத் தயார்.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x