

அமமுக தலைமையில் ஒரு கூட்டணி நிச்சயம் அமையும் என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப். 6 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால், திமுக, அதிமுக உள்ளிட்ட முதன்மைக் கட்சிகள் மட்டுமின்றி, அனைத்துக் கட்சிகளும் தேர்தல் வேலையில் இறங்கியுள்ளன.
கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது, தொகுதிப் பங்கீடு, பிரச்சார வேலைகள், தேர்தல் அறிக்கை தயாரிப்பது, போட்டியிடும் தொகுதிகள் - வேட்பாளர்களை இறுதி செய்வது ஆகிய பணிகளைக் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
சசிகலா விடுதலையாகியுள்ள நிலையில், அமமுக இந்தத் தேர்தலில் எம்மாதிரியான முடிவை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற அமமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தினகரனை முதல்வராக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக - அமமுக இணையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் அமமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, அமமுக வந்தால் வரவேற்போம் என, மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சசிகலாவை அவருடைய தி.நகர் இல்லத்தில் தினகரன் இன்று (மார்ச் 2) சந்தித்து, தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
சந்திப்புக்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் தினகரன் பேசினார். அப்போது, அமமுக - அதிமுக இணைப்பு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த தினகரன், "ஊகங்களுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அமமுக தலைமையில் ஒரு கூட்டணி நிச்சயம் அமையும் என, அன்றைக்கே பொதுக்குழுக் கூட்டத்தில் தெரிவித்தேன். எங்களுடைய ஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பது" என்றார்.
திமுக ஆட்சிக்கு வராமல் இருக்க அதிமுகவுடன் இணைவீர்களா என்ற கேள்விக்கு, "ஊகங்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. ஒரு சில நாட்களில் எங்களின் முடிவைத் தெளிவாக அறிவிப்போம்" எனத் தெரிவித்தார்.